மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்தவர் பிரதீப் டன்னா. இவரது மனைவி தமயந்தி டன்னா. இவர்களது மகன் கடந்த 2011-ல் ரெயிலில் பயணம் செய்தபோது ஏற்பட்ட விபத்தில் பலியானார். மகனின் பிரிவால் டன்னா தம்பதியர் மனவேதனை அடைந்தனர். அடுத்து என்ன செய்வதென தெரியவில்லை.
இந்நிலையில், தங்களை விட்டு பிரிந்த மகனது நினைவாக ஏதாவது செய்ய வேண்டும் என அவர்கள் முடிவு செய்தனர். மூத்த குடிமக்கள் சிலர் உணவுக்காக ஏங்குவதை கண்டனர்.
இதைத்தொடர்ந்து, மூத்த குடிமக்களுக்கு உணவு வழங்கும் பணியை தொடங்கினர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இவர்களது சேவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக தமயந்தி டன்னா கூறுகையில், மூத்த குடிமக்களுக்கு உணவு வழங்குவதற்காக சமையல் செய்து வருகிறோம். உணவுக்காக ஏங்கும் மூத்த குடிமக்களை தேடிச் சென்று உணவை வழங்கி வருகிறோம். எங்கள் வீட்டைத் தேடிவருபவர்களுக்கும் உணவை கொடுத்து வருகிறோம். தினமும் 110 பேருக்கு உணவை வழங்கி வருகிறோம். மேலும், பழங்குடியின பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு தேவையான உடைகளையும் வழங்கி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதீப் டன்னா கூறுகையில், மகனை இழந்த நிலையில் நாங்கள் நொறுங்கி போனோம். அடுத்து என்ன செய்வதென தெரியாமல் திகைத்து நின்ற நிலையில் எனது மனைவி தான் இந்த ஐடியாவை கொடுத்தார் என குறிப்பிட்டுள்ளார்.