செய்திகள்

அமெரிக்கா: தெற்கு கரோலினா பல்கலைகழகத்தில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு - ஒருவர் காயம்

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள பல்கலைகழகத்தில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வாஷிங்டன்:

தெற்கு கரோலினா அமெரிக்காவின் தென் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள மாகாணமாகும். இங்கு தெற்கு கரோலினா பல்கலைகழகம் செயல்பட்டு வருகிறது.

இந்த பல்கலைகழக வளாகத்தினுள் இன்று ஒரு மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த நபர் ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டதாகவும், காக்கி நிற கால்சட்டையும், சாம்பல் நிற மேல்சட்டையும் அணிந்திருந்ததாகவும்  சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் ஒருவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து பல்கலைகழகம் சிறிது நேரம் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.