பல்லடம் அருகே தென்னை மரங்களை வேருடன் பிடுங்கி, மாற்று இடத்தில் நடப்பட்ட போது எடுத்த படம். 
செய்திகள்

பல்லடம் அருகே தென்னை மரங்களை வேருடன் பிடுங்கி மாற்று இடத்தில் நட்ட விவசாயி

பல ஆண்டுகள் வளர்த்த தென்னை மரங்களை வெட்டி வீழ்த்த மனமில்லாத விவசாயிகள் தற்போது மறு நடவு மூலம் அந்த தென்னை மரங்களை காப்பாற்றி வருகின்றனர்.

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி மலையம்பாளையத்தை சேர்ந்தவர் நாகரத்தினம்(வயது  40), விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வளர்த்து வருகிறார். 

இந்த நிலையில் தென்னை மரங்களின் இடையே உள்ள வழிப்பாதையை மாற்றியமைக்க எண்ணினார். வழிப்பாதையை மாற்றியமைக்கும் போது இடையே உள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை அகற்ற வேண்டி இருந்தது. 10 வருடங்களுக்கு மேலாக பிள்ளைகளைப் போல் வளர்த்த தென்னை மரங்களை வெட்டுவதற்கு அவருக்கு விருப்பமில்லை.

அந்த மரங்களை இடம் மாற்றி மீண்டும் உயிர்ப்புடன் இருக்க வைக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். இது சம்பந்தமாக விசாரித்தபோது பல்லடம் அருகே உள்ள சுல்தான்பேட்டை பொக்லைன் உரிமையாளர் கனகராஜ் என்பவர் தென்னை மரங்களை வேருடன் பிடுங்கி மீண்டும் நட்டு உயிர்ப்பித்து வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரை நாகரத்தினம் அணுகினார்.  

அதன்படி நாகரத்தினம் தோட்டத்தில் இருந்த 10 தென்னை மரங்களும் வேருடன் பிடுங்கப்பட்டு மாற்று இடத்தில் நடப்பட்டு, மீண்டும் உயிர்ப்பிக்கபட்டது. 

இதுகுறித்து பொக்லைன் உரிமையாளர் கனகராஜ் கூறுகையில்:

திருப்பூர், கோவை, மாவட்டங்களில் உயர்மின் கோபுர திட்டத்திற்காக ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை அகற்ற வேண்டியிருந்தது. 

இதுகுறித்து மாற்று வழியை யோசித்தபோது தென்னை மரங்களை வேருடன் பிடுங்கி சுமார் 5 அடி ஆழத்தில் குழி தோண்டி அதற்குள் முளைக்கட்டிய, தட்டை பயிறு, சுண்டல், ராகி, கம்பு, ஆகிய தானியங்கள் போட்டு, தென்னை மரங்களை நட்டு வைத்தால் வேர்களுக்கு ஊட்டச்சத்து கிடைத்து, தென்னை மரங்கள் உயிர்ப்பித்து மீண்டும் நன்கு வளர்கிறது. 

பல ஆண்டுகள் வளர்த்த தென்னை மரங்களை வெட்டி வீழ்த்த மனமில்லாத விவசாயிகள் தற்போது மறு நடவு மூலம் அந்த தென்னை மரங்களை காப்பாற்றி வருகின்றனர். 

இதுவரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்களை மறு நடவு செய்து காப்பாற்றி உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். தென்னை மரங்களை மறு நடவு செய்த விவசாயியை அந்தப் பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.