செய்திகள்

கள்ளக்காதல் தகராறில் விவசாயி வெட்டிக் கொலை - மர்ம உறுப்பை அறுத்து வீசிய கொடூரம்

திருப்பத்தூர் அருகே கள்ளக்காதல் தகராறில் மர்ம உறுப்பை துண்டித்து விவசாயி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

திருப்பத்தூர்:

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஏ.கே.மோட்டூரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). விவசாயி. இவரது நிலத்தில் பூக்கள், மஞ்சள் பயிரிட்டுள்ளார். தினமும் பூக்களை பறித்து திருப்பத்தூர் டவுனுக்கு சென்று விற்பனை செய்த வந்தார். நேற்று இரவு பூக்களை விற்பனை செய்துவிட்டு ஏ.கே.மோட்டூர் ஏரிக்கரை வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தார்.

அப்போது கும்பல் ஒன்று அவரை வழிமறித்து கத்தியால் கழுத்து, கைகளில் வெட்டி சாய்த்தது. மேலும் அவரின் மர்ம உறுப்பை துண்டித்து வீசியுள்ளனர். படுகாயமடைந்த சிவக்குமார் சம்பவ இடத்தில் துடிதுடித்து இறந்தார்.

அவர் பிணமாக கிடந்ததை கண்ட பொதுமக்கள் திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனையிட்டனர்.

உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலையான சிவக்குமாருக்கு தனலெட்சுமி (35) மனைவி மற்றும் 2 மகள் ஒரு மகன் உள்ளனர். அவருக்கு முன் விரோதிகள் உள்ளார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மர்ம உறுப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் வேறு ஏதாவது காரணத்துக்காக கொலை நடந்ததா? என்ற கோணத்தில் விசாரணையில் இறங்கினர். அதில் சிவக்குமாருக்கு அவரது நிலத்தில் வேலை செய்து வந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது.

அந்த பெண்ணுக்கும் புதுபூங்குளம் கிராமத்தை சேர்ந்த காண்ட்ராக்டர் ஒருவருடன் தொடர்பு இருந்தது. இதனால் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த காண்ட்ராக்டரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். #tamilnews