கேரளாவில் செயல்படும் சீரோ மலபார் சபையின் பிஷப் பிராங்கோ முல்லக்கல் மீது கோட்டயம் குருவிலங்காடு கன்னியாஸ்திரிகள் மடத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகார் கூறி உள்ளார். பிஷப் பிராங்கோ முல்லக்கல் கோட்டயத்திற்கு வந்தபோது தன்னை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பிஷப்பை இன்னும் கைது செய்யவில்லை. இதனால் கன்னியாஸ்திரிகள் இணைந்து அவரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். மேலும், கூட்டு கிறிஸ்தவ கவுன்சிலின் உறுப்பினர் ஸ்டீபன் மேத்யூ, பிஷப்பை கைது செய்ய வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். 8 நாட்களுக்கு முன்பு துவங்கிய இந்த உண்ணாவிரதப்போராட்டம் தற்போது வரை தொடர்ந்து வருகிறது.