செய்திகள்

இறைச்சிக்காக பசுக்களை கொன்றதாக சிறுமிகள் உள்பட 9 பேர் கைது

உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் இறைச்சிக்காக பசுக்களை கொன்றதாக கூறி சிறுமிகள் உள்பட 9 பேரை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாலை மலர்

முசாபர்நகர்:

உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரை சேர்ந்தவர் நசிமுதீன். இவரது வீட்டில் புகுந்து காதாபுலி போலீசார் திடீரென சோதனை நடத்தினர். அங்கிருந்து 10 குவிண்டால் அதாவது 1000 கிலோ மாட்டிறைச்சி மற்றும் கசாப்புக்கு பயன்படுத்தும் அரிவாள், கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

இறைச்சிக்காக பசுக்களை கொன்றதாக கூறி நசிமுதீன் மனைவி மற்றும் அவரது 12 வயது மற்றும் 16 வயது மகள்களை கைது செய்தனர். இவர்கள் தவிர மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் நசிமுதீனின் மகள்கள் சிறுமிகள் என்பதால் அவர்கள் சிறுவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதை தொடர்ந்து 2 பேரும் சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.

நசிமுதீன் மனைவி உள்பட 7 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இறைச்சிக்காக பசுக்களை கொன்றதாக நசிமுதீன் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன.

இச்சம்பவத்திலும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது இவர் தலைமறைவாகிவிட்டார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

அதை தொடர்ந்து நசிமுதீன் உறவினர்களும், அக்கம்பக்கத்தினரும் போலீசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். நசிமுதீன் மனைவி அவரது மகள்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்போராட்டம் நடத் தப்பட்டது.

இறைச்சிக்காக பசுக்களை கொன்றதாக சிறுமிகளும், நசிமுதீனின் மனைவியும் கைது செய்யப்பட்டது குறித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அஜய்ஷாதேவிடம் புகார் செய்யப்பட்டது. அதையடுத்து சம்பந்தப்பட்ட காதாயு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டார்.