நாகை மாவட்டம் பொறையாறில் புதிய பஸ் நிலையம் அருகில் அரசு போக்குவரத்து கழக பணிமனை 2 மாடி கட்டிடத்தில் அமைந்துள்ளது. இங்கு டிரைவர்கள், கண்டக்டர்கள், தங்குவதற்கான ஓய்வு அறைகள் உள்ளது.
இரவுப் பணி முடிந்து பஸ்களை நிறுத்தி விட்டு டிரைவர்கள்-கண்டக்டர்கள், மெக்கானிக்குகள் நேற்று இரவு படுத்து தூங்கினர். மேல் தளத்தில் 17 பேரும், கீழ் தளத்தில் 8 பேரும் தூங்கிக் கொண்டு இருந்தனர்.
இன்று அதிகாலை 3.15 மணி அளவில் திடீர் என்று கட்டிடத்தின் மேற்கூரை பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. அப்போது ஊழியர்கள் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்ததால் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
மேல் தளத்தின் கட்டிட இடிபாடுகள் விழுந்ததில் கீழ் தளம் தாங்காமல் அதுவும் இடிந்து விழுந்தது. இதனால் கீழ் தளத்தில் தூங்கிய 8 பேர் அதே இடத்தில் உடல் நசுங்கி இறந்தனர். காரைக்கால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கண்டக்டர் வெங்கடேசன் பலியானார். இதன்மூலம் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.
கட்டிடம் இடிந்ததும் மேல் தளத்தில் தூங்கியவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர். சத்தம் கேட்டு அருகில் கட்டிடத்தில் தூங்கிக் கொண்டு இருந்தவர்கள் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
போலீசுக்கும் தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேல் தளத்தில் தூங்கிய 14 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
செந்தில்குமார், வெங்கடேசன், பிரேம்குமார் ஆகியோர் பலத்த காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு வெங்கடேசன் பலியானார்.
இடிபாடுகளில் சிக்கி பலியான 9 பேர் பெயர் விவரம் வருமாறு:-
1. பிரபாகரன் (52). காளஹஸ்தினாபுரம், செம்பனார்கோவில்.
2. பாலு (49).காளஹஸ் தினாபுரம், செம்பனார் கோவில்.
3. சந்திரசேகர் (35).கீழையூர்.
4. முனியப்பன் (42). கீழபெரும்பள்ளம்.
5. அன்பரசன் (39) திருக்குவளை, திருவாரூர் மாவட்டம்.
6. தனபால் (48) காரைக்கால்.
7. மணிவண்ணன் (50), வடகட்டளை.
(இவர்கள் அனைவரும் பஸ் டிரைவர்கள் ஆவர்)
8. ராமலிங்கம் (55) பஸ் கண்டக்டர், மேலையூர்.
9. வெங்கடேசன் பஸ் கண்டக்டர்.
இடிந்து விழுந்த கட்டிடம் ஆங்கிலேயர் காலத்து மிகப் பழமையானது 1942-ல் பழங்கால முறைப்படி சுண்ணாம்பு கல்லால் கட்டப்பட்டது.
கட்டிடம் மோசமான நிலையில் இருப்பதாகவும் புதுப்பித்து தருமாறும் போக்குவரத்து ஊழியர்கள் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து வந்தனர். ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. இதனால் கட்டிடம் இடிந்து 9 பேர் பலியாகி விட்டனர்.
பஸ் டெப்போ கட்டிடம் இடிந்த தகவல் கிடைத்ததும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் விரைந்து சென்று மீட்பு பணியை முடுக்கி விட்டனர்.
நாகை கலெக்டர் சுரேஷ் குமார் போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணி நடவடிக் கைகளை மேற்கொண்டனர்.