செய்திகள்

பெரியகுளத்தில் தீ விபத்து: 9 வீடுகள் தீயில் எரிந்து நாசம்

தேனி மாவட்டம் பெரியகுளம் பட்டாளம்மன் கோவில் தெருவில் மின் கசிவு ஏற்பட்டதில் 9 குடிசைகள் எரிந்து நாசமானது.

மாலை மலர்

பெரியகுளம்:

தேனி மாவட்டம் பெரியகுளம் பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் எலிசபெத். இவர் வீட்டு மாடியில் குளிர்ச்சிக்காக குடிசை அமைத்துள்ளார். இதன் அருகே சென்ற மின் வயர் உரசி திடீர் என குடிசை தீ பற்றியது.

கண் இமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பரவி அருகில் இருந்த முத்து, பாலகிருஷ்ணன், கோவிந்தன், ராமு, நாகராஜ் உள்பட 9 பேரின் வீடுகள் எரிந்து நாசமானது.

சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். சம்பவம் குறித்து மின் வாரிய ஊழியர்கள் மற்றும் தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியகுளத்தில் பட்டாளம்மன் கோவில் தெரு, பள்ளிவாசல் தெரு ஆகியவை அகலமாக இருந்தன. ஆனால் வீட்டின் முன்பு சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் சாலை குறுகி ஒடுக்கமாகி சிறிய வாகனங்கள் கூட சென்று வர முடியவில்லை. இதனால் அவசர கால உதவி வாகனங்களான 108 ஆம்புலன்ஸ், தீணைப்பு வாகனங்கள் சென்று வர முடியவில்லை.

குடிசைகள் தீ பற்றிய போதும் தீயணைப்பு வாகனங்கள் தெருவுக்குள் செல்ல முடியாததால் தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இது குறித்து நகராட்சியிடம் பல முறை முறையிட்டும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்னர்.

பெரும் விபத்து ஏற்படும் முன்பு நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.