பார்சிலோனா:
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் காட்டலோனியா மாகாணம் தன்னாட்சி உரிமை பெற்றுள்ளது, செழிப்பான இப்பகுதி ஸ்பெயினில் இருந்து பிரிந்து தனி நாடு ஆக சுதந்திரம் பெற விரும்புகிறது.
அதற்கு ஸ்பெயின் அங்கீகாரம் அளிக்கவில்லை. எனவே தனிநாடு கேட்டு கடந்த 5 ஆண்டுகளாக அங்கு போராட்டம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஸ்பெயினில் இருந்து தனி நாடாக வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்பதை அறிய நேற்று பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அது சட்டவிரோதமானது என ஸ்பெயின் அறிவித்தது. இருந்தும் வாக்கு சாவடிகளுக்கு மக்கள் சாரை சாரையாக வந்து வாக்களித்தனர். பலர் முந்தைய நாள் இரவே வாக்கு சாவடியில் வந்து தங்கிவிட்டனர்.
வாக்குப் பதிவு தொடங்கியதும் போலீசார் வந்து ஓட்டு பெட்டிகளையும், வாக்கு சீட்டுகளையும் பறித்து சென்றனர். ஓட்டு போட வந்த பெண்கள் மற்றும் ஆண்களை பிடித்து சென்றனர். பெண்களின் தலை முடியை பற்றி இழுத்தனர்.
இதனால் பல இடங்களில் போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் 800-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களில் 12 போலீஸ் அதிகாரிகளும் அடங்குவர்.
இதற்கிடையே நேற்று நடந்த பொது வாக்கெடுப்பில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. அவற்றில் 90 சதவீதம் பேர் காட்டலோனியாவுக்கு சுதந்திரம் வழங்கவேண்டும் என கோரியுள்ளதாகவும், எனவே பொது வாக்கெடுப்பு வெற்றி பெற்றதாகவும் காட்டலோனியா போராட்ட குழு தலைவர் புயுக்டிமான்ட் தெரிவித்தார்.
இத்தகவலை அவர் டெலிவிஷன் உரையின் போது குறிப்பிட்டார். காட்டலோனியா மக்கள் தாங்கள் சுதந்திர நாடு கேட்டு போராட்டம் நடத்தினர். தற்போது தங்கள் உரிமைப் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளனர். பொது வாக்கெடுப்பு முடிவு காட்டலோனியா பாராளுமன்றத்தில் இன்னும் சில நாட்களில் அனுப்பி வைக்கப்படும் என்றார்.
பொது வாக்கெடுப்பில் கிடைத்த வெற்றியை காட்டலோனியா மாகாண தலைநகர் பார்சிலோனாவில் மக்கள் ஒன்று திரண்டு கொண்டாடினர். கொடிகளை அசைத்தும், காட்டலோனியா தேசிய கீதம் இசைத்தும் மகிழ்ச்சி கூத்தாடினர். அதே நேரத்தில் சுதந்திரத்துக்கு எதிரான போராட்டம் பார்சிலோ மற்றும் சில நகரங்களில் நடந்தது.
அதற்கிடையே பொது வாக்கெடுப்புக்கு ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். காட்டலோனியா மக்கள் சட்ட விரோதமான வாக்கெடுப்பில் பங்கேற்று முட்டாள் தனமான முடிவை எடுத்துள்ளனர். அது ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கும் செயல் என்றார்.