திருப்பத்தூர்:
சேலம் மார்க்கத்தில் இருந்து துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை சாமல்பட்டி, வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை வழியாக ஜோலார்பேட்டைக்கு வந்து கொண்டிருந்தது. காக்கங்கரை அடுத்த செவ்வாத்தூர் என்ற இடத்தில் வந்தபோது, தண்டவாளத்தின் மேல் செல்லும் மின்சார கம்பிகள் திடீரென அறுந்து ரெயில் என்ஜின் மீது விழுந்தது.
இதையடுத்து, ரெயிலை மேலும் இயக்க முடியாமல் என்ஜின் டிரைவர் அங்கேயே நிறுத்திவிட்டு, ஜோலார்பேட்டை ரெயில்வே துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். ரெயில்வே ஊழியர்கள் விரைந்து அந்த பகுதிக்கு சென்றனர். அறுந்து விழுந்த மின்சார கம்பிகளை உடனடியாக சரிசெய்யும் பணியில் விரைந்து செயல் பட்டனர்.
இந்த பணி காரணமாக, இன்று காலை சேலத்தில் இருந்து அந்த பாதை வழியாக ஜோலார்பேட்டை, சென்னைக்கு வந்து கொண்டு இருந்த மங்களூரு எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், சென்னை சிறப்பு ரெயில் உள்பட சுமார் 8 ரெயில்கள் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
மேலும், செவ்வாத்தூரில் வளைவு பாதை இல்லாததால், ரெயில்களை பின் நோக்கியும் இயக்க முடியாது என்பதாலும், மறுமார்க்கத்தில் சேலத்திற்கு செல்லும் அனைத்து ரெயில்களும் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திலேயே பலமணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டன.
இதையடுத்து, சேலம் மார்க்கமாக வந்த மற்ற ரெயில்கள் சாமல்பட்டியில் மறுமார்க்க தண்டவாளத்தில் திருப்பிவிடப்பட்டு இயக்கப்பட்டது. மின்சார கம்பிகளை சரிசெய்யும் பணி மிகவும் தாமதமானதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ளாமல் ரெயில்வே ஊழியர்கள் அலட்சியமாக செயல்பட்டதே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க தண்டவாளங்களில் மின் பராமரிப்பு பணிகளை முறையாக செய்ய வேண்டும் என ரெயில் பயணிகள் வலியுறுத்தினர். #tamilnews