தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி மரணம் அடைந்தார். சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 75 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி மரணம் அடைந்தார்.
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைத்துள்ளார்.
இந்த விசாரணை கமிஷனுக்கு சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள கலசமகாலில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அலுவலகத்துக்கு கடந்த மாதம் வந்த நீதிபதி ஆறுமுகசாமி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் தகுந்த ஆவணங்களுடன் தகவல் தரலாம் என்று தெரிவித்திருந்தார். இது தொடர்பாக 15 பேர்களுக்கு கமிஷன் நோட்டீசு அனுப்பி இருந்தது.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன், விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் சொல்ல விரும்புவதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.
அதில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போசுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கோரும் படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகை வைக்கப்பட்டதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறி உள்ளார். மேலும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கும், அப்பல்லோ ஆஸ்பத்திரி வெளியிட்ட மருத்துவ அறிக்கைகளுக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
இதனால் விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சரவணனுக்கு நீதிபதி ஆறுமுகசாமி சம்மன் அனுப்பி உள்ளார்.
அதில் வருகிற 22-ந்தேதி காலை 10.30 மணிக்கு விசாரணை ஆணையத்தின் அலுவலகத்தில் நடைபெறும் விசாரணையில் ஆஜராகி அனைத்து ஆவணங்களையும் கொண்டு வந்து விசாரணை சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆஜராக தவறினால் தாங்கள் இல்லாமலேயே ஆணையம் விசாரணையை மேற்கொண்டு முடிவு செய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போல் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆனூர் ஜெகதீசன் உள்பட 8 பேர் விசாரணை கமிஷனுக்கு பிரமாணப் பத்திரங்களை அனுப்பி வைத்துள்ளனர். அவர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது.