செய்திகள்

தெலுங்கானாவில் துப்பாக்கி சண்டை: 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை

தெலுங்கானாவில் தேக்குள்பள்ளி வனப்பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் புதிதாக நக்சலைட்டு இயக்கம் ஒன்று கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது.

சி.பி.ஐ. (எம்.எல்.) மற்றும் சி.பி. என்று அழைக்கப்படும் இந்த இயக்கம் ஜெய்சங்கர், மகபூபாத், கோதாகுடம், காணம் ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது.

இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் மிரட்டல், வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. கோதா குடம் மாவட்டம் தேக்குள்பள்ளி வனப்பகுதியில் இன்று காலை 6.30 மணிக்கு அந்த இயக்கத்தை சேர்ந்த நக்சலைட்டு தீவிரவாதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

இதில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். போலீசார் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அந்த இடத்தில் இருந்து போலீசார் பல்வேறு விதமான ஆயுதங்களை கைப்பற்றினர்.

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அந்த இடத்துக்கு அதிரடியாக சென்று இந்த தாக்குதலை வெற்றிகரமாக செயல்படுத்தினர்.

SCROLL FOR NEXT