செய்திகள்

மேற்கு வங்காளம்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 8 பேர் பலி

மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள கலகட்டா பகுதியில் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்ததில் 4 பெண்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக பலியாகினர்.

கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலத்தின் நாடியா மாவட்டத்தில் கிருஷ்ணாநகரில் இருந்து பலாசே பரா என்ற பகுதிக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.

இந்நிலையில், கலகட்டா பகுதியில் வந்தபோது, பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறிய பேருந்து அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது.

இந்த விபத்தில் சிக்கி, பேருந்தில் பயணம் செய்த 4 பெண்கள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 36 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று, மீட்பு நடவடிக்கைகளில் இறங்கினர். பலியானோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு நிவாரணமாக தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.