மிசோரம் மாநிலம் சாம்பாய் மாவட்டத்தில் உள்ள நியூ கிரூயாய்கான் கிராமத்தைச் சேர்ந்தவர் லால்ரிங்தாரா. 73 வயதான இவர் அங்குள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில் இரவு காவலராக பணியாற்றி வருகிறார். சிறுவயதில் மற்ற குழந்தைகளை போல லால்ரிங்தாராவும் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார். இரண்டாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் போது அவருடைய தந்தை இறந்து விட்டார். இதையடுத்து அவர் தாய் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதனால் லால்ரிங்தாரா அனாதை ஆனார். அவரால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. அவரை உறவினர் ஒருவர் வளர்த்து வந்தார்.
இந்நிலையில், 60 ஆண்டுகளுக்கு பிறகு லால்ரிங்தாராவிற்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்துள்ளது. அதனால் தனது கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் சேர்ந்துள்ளார். அடுத்த கல்வி ஆண்டு முதல் பள்ளிக்கு சென்று படிக்க உள்ளதாக லால்ரிங்தாரா மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகிறார்.