பீகார் மாநிலத்தில் பரீட்சை என்றாலே காப்பி அடிப்பது, ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுத செய்வது பிரபலமாக இருந்து வந்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பள்ளியில் தேர்வு நடந்த போது நூற்றுக்கணக்கானோர் மாடியில் ஏறி நின்று மாணவர்களுக்கு பிட் எழுதி கொடுத்த வீடியோ பதிவு வெளியே வந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்ற டாப் மாணவர்கள் சாதாரண கேள்விக்கு கூட பதில் அளிக்க முடியாமல் திணறிய விஷயம் வெளியே வந்தது. இதனால் அவர்களில் பலருக்கு மறு தேர்வு நடத்திய சம்பவமும் நடந்தது.
எனவே, பள்ளி தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க கடும் விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. இதனால் காப்பி அடிப்பது பெரும்பாலும் தடுக்கப்பட்டது.
இதன் காரணமாக பீகார் மாநில பள்ளி தேர்வு முடிவும் மிக மோசமான நிலையை எட்டி உள்ளது. நேற்று அந்த மாநிலத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.
அதில், அறிவியல் பிரிவு மாணவர்களில் 70 சதவீதம் பேரும், கலை பிரிவு மாணவர்களில் 76 சதவீதம் பேரும் தோல்வி அடைந்துள்ளனர். இந்த மாணவர்கள் பெற்ற சராசரி மார்க் 44.66 சத வீதமாக உள்ளது.
கடந்த ஆண்டு தேர்வில் அறிவியல் பிரிவு மாணவர்கள் 67 சதவீதம் பேரும், கலை பிரிவு மாணவர்கள் 80.87 சதவீதம் பேரும் வெற்றி பெற்று இருந்தனர்.
ஆனால், இப்போது மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளனர். பீகார் மாநிலத்தில் இந்த அளவுக்கு தேர்ச்சி விகிதம் குறைந்தது இதுவே முதல் முறையாகும்.
அறிவியல் பிரிவு, கலை பிரிவில் மாணவர்கள் பெரும் தோல்வியை சந்தித்து இருந்தாலும், வணிகவியல் பிரிவில் சிறப்பான தேர்ச்சியை பெற்றுள்ளனர். இதில் 74 சதவீத மாணவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
இது தொடர்பாக பள்ளி கல்வி வாரிய தலைவர் ஆனந்த் கிஷோர் கூறும் போது, தேர்வில் எந்தவித குளறுபடிகளும், மோசடிகளும் ஏற்படக் கூடாது என்பதற்காக எடுத்த கடும் நடவடிக்கை காரணமாக தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது என்று கூறினார்.
பாரதிய ஜனதா மூத்த தலைவர் நந்த்கிஷோர் யாதவ் கூறும் போது, பீகார் மாநிலத்தின் கல்வித்தரம் மிகவும் குறைந்து இருப்பதால்தான் தேர்ச்சி விகிதம் இந்த அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.