போரூர்:
கே.கே. நகர் அடுத்த விஜயராகவபுரம் 4-வது குறுக்கு தெருவைச் சேர்ந்த தம்பதிகள். இவர்களுக்கு 7 மற்றும் 10 வயதில் 2 மகள்கள், ஒரு வயது மகன் உள்ளனர். மூத்த மகள் 4-ம் வகுப்பும், 2-வது மகள் 2-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
கணவன்-மனைவி இருவரும் வீட்டின் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சூப்பர்வைசர் மற்றும் வீட்டு வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 2-வது மகள் கழிவறைக்கு சென்றார்.
வெகு நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த தாய் கழிவறைக்கு சென்று பார்த்தபோது மகள் மயங்கி விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மகளை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அசோக் நகர் உதவி கமிஷனர் பிராங்க் ரூபன் கேகே நகர் இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் சிறுமியின் தாயிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.
எனது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பிரம்மதேசம். ஏற்கனவே உறவினர் ஒருவரை திருமணம் செய்து அவர் மூலம் எனக்கு 2 மகள்கள் பிறந்தது. கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்து விட்டேன்.
2 குழந்தைகளையும் தாய் வீட்டில் விட்டுவிட்டு பாண்டிச்சேரி சென்றேன். அங்கு ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்தபோது உடன் பணிபுரிந்து வந்தவரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன். அவர் மூலம் ஒரு மகன் உள்ளான்.
கடந்த ஆண்டு குழந்தைகளை பார்க்க ஊருக்கு சென்றேன். அப்போது கடந்த 2018-ம் ஆண்டு முதல் எனது உறவினர்களால் பாலியல் ரீதியாக துன்பறுத்தப்பட்டு வருவதாக மகள்கள் என்னிடம் கூறி அழுதனர்.
மேலும் இதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று குழந்தைகளை மிரட்டி வந்ததும் தெரியவந்தது. உறவினர்களால் எனது மகள்கள் சீரழிக்கப்பட்டதால் மனமுடைந்த நான் மகள்களை என்னுடன் பாண்டிச்சேரிக்கு அழைத்து சென்று அங்குள்ள பள்ளியில் படிக்க வைத்து வந்தேன்.
பள்ளிக்கு சென்ற மூத்த மகள் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதை கண்ட பள்ளி ஆசிரியை மகளிடம் விசாரித்த போது நடந்த சம்பவங்களை கூறினார்.
அதிர்ச்சி அடைந்த ஆசிரியை பள்ளி நிர்வாகம் மூலம் பாண்டிச்சேரி “சைல்டு லைனுக்கு” தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சைல்டு லைன் அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நலக்குழுவினர் என்னிடம் வந்து விசாரணை நடத்தினர்.
குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட கொடூர சம்பவங்கள் தெரிந்ததும் உடனடியாக 2 மகள்களும் பாண்டிச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய விழுப்புரம் பிரம்மதேசம் போலீசார் எனது மகள்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மொத்தம் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதில் 16 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் உறவினர்கள் மூலம் எனக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் கணவர் குழந்தைகளுடன் சென்னைக்கு வந்தேன் என்றார்.
மேலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சிறுமிகள் அடிக்கடி வயிற்று வலியால் துடித்து வந்துள்ளனர். இந்த நிலையில் தான் இளைய மகள் கழிவறைக்கு சென்றபோது மயங்கி விழுந்து இறந்துள்ளார்.
ஏற்கனவே பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மூத்த மகளுக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே கைதானவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.