செய்திகள்

ஒரு வாரத்துக்கு முன்பு மாயமான கிரிபட்டி படகில் பயணம் செய்த 7 பேர் உயிருடன் கண்டுபிடிப்பு

நியூசிலாந்து நாட்டின் விமானப்படை, வான்வழி தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில் மாயமான கிரிபட்டி படகு, பசிபிக் தீவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதில் 7 பேர் உயிருடன் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

மாலை மலர்

தெற்கு டாரவா:

மத்திய பசிபிக் கடல் தீவு நாடு, கிரிபட்டி. இந்த நாட்டுக்கு சொந்தமான எம்.வி. புட்டிராவோய் என்ற படகு 50 பேருடன் ஒரு வாரத்துக்கு முன்பு காணாமல் போய் விட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும், மீட்பு பணியில் நியூசிலாந்து, பிஜி நாடுகள் உதவிக்கரம் நீட்டின.

நியூசிலாந்து நாட்டின் விமானப்படை, வான்வழி தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில் மாயமான படகு, பசிபிக் தீவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதில் 7 பேர் உயிருடன் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. உயிர் பிழைத்தவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும், தகவல் தொடர்பு கருவிகளையும் நியூசிலாந்து விமானப்படை விமானம் போட்டு உள்ளது.

இதுபற்றி நியூசிலாந்து நாட்டு விமானப்படை உயர் அதிகாரி டேரின் வெப் கூறும்போது, “ மாயமான கிரிபட்டி படகை, எங்களுடைய பி-3கே2 ஆரியன் விமானம் இன்று (நேற்று) கண்டுபிடித்து உள்ளது. அந்த படகில் இருப்பவர்களுக்கு விமானம் உதவிப்பொருட்களை போட்டு உள்ளது. அவர்களுடன் தகவல் தொடர்பு கொள்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.

அந்தப் படகில் பயணம் செய்த எஞ்சிய 47 பேர் பற்றி எந்த தகவலும் இல்லை. அவர்களை தேடும் பணி தொடர்கிறது.