கைதான முனுசாமி 
செய்திகள்

7 மூதாட்டிகளை கொடூரமாக கொன்ற சைக்கோ கைது

தமிழகம்-ஆந்திராவில் 7-க்கும் மேற்பட்ட மூதாட்டிகளை கடித்தும், கல்லால் தாக்கியும் கொடூரமாக கொன்றுவந்த சைக்கோ கொலையாளி போலீசில் சிக்கினான்.

திருமலை:

வேலூர் மாவட்டம் சோளிங்கர் அருகே உள்ள தாளிக்கால் கிராமம் ராமதாஸ் நகரை சேர்ந்தவர் தெய்வானை (வயது 65). விதவை. கதவு இல்லாத ஒரு சிறிய வீட்டில் தெய்வானை தங்கி வசித்தார்.

நேற்று முன்தினம் காலை தெய்வானை தனது வீட்டில் நிர்வாணமாக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்தார். தலை, முகத்தை கல்லால் தாக்கியதில் வீடு முழுவதும் ரத்தம் உறைந்து கிடந்தது.

அதே பகுதியில் ஈஸ்வரன் கோவில் தெருவில் வசிக்கும் காந்தம்மாள் (55) என்ற மற்றொரு மூதாட்டியையும், நள்ளிரவில் வீடு புகுந்து மர்ம நபர் கல்லால் கொடூரமாக தாக்கியுள்ளான். இதில் அவர் பலத்த காயமடைந்தார்.

இதே பாணியில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சோளிங்கர் குன்னத்தூர் கிராமத்தில் 65 வயது மூதாட்டி நிர்வாணப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். திருவள்ளூரிலும் ஒரு மூதாட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

அதேபோல், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் நகரி அருகேயுள்ள வி.கே.ஆர்.புரத்தில் தனியாக வசித்த ரத்தினம்மாள் (62) என்ற மூதாட்டி கடந்த மாதம் 25-ந் தேதி கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, சித்தூர் மாவட்டம் பால சமுத்திரம் அருகே அப்பல் ராஜ்கண்டிகை கிராமத்தை சேர்ந்த வெள்ளையம்மாள் (60) என்ற மூதாட்டியும் உடல் முழுவதும் கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

வயதான பெண்களை குறி வைத்தே ஒரே பாணியில் இது போன்ற கொடூர கொலைகள் நடந்துள்ளன. எனவே, ‘சைக்கோ’ கொலையாளியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

தமிழகம்-ஆந்திர எல்லை மாவட்டங்களில் தான் ‘சைக்கோ’ கொலையாளி பதுங்கி மூதாட்டிகளை கொன்றதும் தெரியவந்தது.

சித்தூர் எஸ்.பி. ராஜசேகர் பாபு தலைமையிலான தனிப்படை போலீசார், வேலூர் மாவட்டம் சோளிங்கருக்கு செல்லும் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா காட்சிகளை சோதனையிட்டனர்.

அதில், மனநலம் பாதித்த ஒருவர் ரத்தக்கறை படிந்த ஆடைகளுடன் மிகவும் ஆக்ரோ‌ஷமாக கை, கால்களை அசைத்தப்படி நடந்துச் சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது.

இதையடுத்து சோளிங்கர், ஆற்காடு, ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் வேலூர் போலீசார் உதவியுடன் ஆந்திர போலீசார் சைக்கோ கொலையாளியை பிடிக்க தேடுதல் வேட்டையில் களம் இறங்கினர்.

சோளிங்கரில் மூதாட்டி கொல்லப்பட்ட பகுதியில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியபோது, அங்கு சுற்றித்திரிந்த ‘சைக்கோ கொலையாளியை ஆந்திர போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

விசாரணையில், சோளிங்கரை சேர்ந்த முனுசாமி (50) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த சைக்கோ கொலையாளியை ஆந்திர மாநில போலீசார் சித்தூருக்கு அழைத்துச் சென்றனர்.

சைக்கோ கொலையாளி அளித்த வாக்குமூலம் போலீசாரையே அதிர வைத்தன. வேலூர், திருவள்ளூர் மற்றும் சித்தூர் மாவட்டங்களில் மூதாட்டிகளை குறிவைத்து இரவு நேரங்களில் வீடு புகுந்து கற்பழித்துள்ளான்.

பிறகு நிர்வாணமாக்கி உடல் முழுவதும் பற்களால் கடித்துள்ளான். பலாத்காரம் செய்த பிறகு, மூதாட்டிகளை இரக்கமின்றி பாறாங்கல்லை தூக்கி போட்டு தலை மற்றும் முகத்தை நசுக்கி கொன்று வெறியை தீர்த்துக் கொண்டுள்ளான்.

தமிழகம், ஆந்திராவில் மட்டும் இதுவரை 7-க்கும் மேற்பட்ட மூதாட்டிகளை இந்த சைக்கோ கொடூரமாக கொன்றுள்ளான். பகலில் மனநலம் பாதித்தவன் போல் நடித்து நோட்டம் பார்த்து இரவில் கொலைகளை அரங்கேற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

ஆந்திர போலீசாரின் கஸ்டடியில் உள்ள சைக்கோ கொலையாளி முனுசாமிக்கு சமீபத்தில் சோளிங்கர் மற்றும் திருவள்ளூரில் நடந்த மூதாட்டி கொலைகளிலும் தொடர்பிருப்பதால், அவனை காவலில் எடுத்து வந்து விசாரிக்க வேலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட போலீசாரும் முடிவு செய்துள்ளனர். #Tamilnews

SCROLL FOR NEXT