செய்திகள்

கோரக்பூர் ஆஸ்பத்திரியில் 4 நாளில் 68 குழந்தைகள் பலி

கோரக்பூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 4 நாட்களில் அடுத்தடுத்து 68 குழந்தைகள் உயிர் இழந்துள்ளன.

மாலை மலர்

கோரக்பூர்:

உத்தரப்பிரதேச முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியான கோரக்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஆகஸ்டு மாதம் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பச்சிளங் குழந்தைகள் உள்பட 63 குழந்தைகள் உயரிழந்தன.

இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு கெட்ட பெயர் உருவானது. ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்த டீலருக்கு பணம் பட்டுவாடா செய்யாததால் அவர் சிலிண்டர் சப்ளையை நிறுத்தி விட்டார். இதன் காரணமாக தட்டுப்பாடு ஏற்பட்டது தெரியவந்தது.

குழந்தைகள் உயிரோடு விளையாடிய இந்த சம்பவம் தொடர்பாக சிலிண்டர் சப்ளை செய்யும் டீலர், அரசு மருத்துவக் கல்லூரி டீன் உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு பின்பு மீண்டும் குழந்தைகள் உயிரிழப்பு நடந்துள்ளது. கோரக்பூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 4 நாட்களில் அடுத்தடுத்து 68 குழந்தைகள் உயிர் இழந்துள்ளன.

இங்குள்ள குழந்தைகள் வார்டில் 198 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். 42 குழந்தைகள் இறந்தன. தொடர்ந்து 24 குழந்தைகளும் நேற்று 16 குழந்தைகளும் என கடந்த 4 நாட்களில் 68 குழந்தைகள் பலியானது.

கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் முடிய இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 1,718 குழந்தைகள் உயிர் இழந்து இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 362 குழந்தைகள் பலியாகி இருக்கிறது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 586 குழந்தைகளும், 2015-ல் 662 குழந்தைகளும் பலியானது.

2014-ம் ஆண்டில் குழந்தைகள் மொத்தம் உயிரிழப்பு 4,391 ஆகவும், 2015-ல் 5,236 ஆகவும், 2016-ல் 4,359 ஆகவும் இருந்தது.