ஒகேனக்கல்:
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் கே.ஆர்.எஸ்., கபினி, ஹேரங்கி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து நேற்று காலை முதல் நீர்திறப்பு 75 ஆயிரத்து 499 கனஅடியாக இருந்தது. இந்த நீர்திறப்பு இன்று காலை குறைக்கப்பட்டது. 2 அணைகளில் இருந்தும் மொத்தம் 62 ஆயிரத்து 760 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 23 ஆயிரத்து 333 கனஅடியும், கபிணி அணையில் இருந்து 39 ஆயிரத்து 427 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவுக்கும் ஒகேனக்கல்லுக்கும் நேற்று நீர்வரத்து 75 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இன்று காலை 9 மணிக்கு நீர்வரத்து 90 ஆயிரம் கனஅடியை எட்டியது. இதனால் தொடர்ந்து ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ள நீர் கொட்டுகிறது. ஐந்தருவியில் பாறைகள் தெரியாத அளவிற்கு தண்ணீர் செல்கிறது. பிலிகுண்டுலு அருகே பரந்து விரிந்த காவிரி ஆற்றின் நடுவில் உள்ள பாறைகள் தெரியாத அளவிற்கு தண்ணீர் செல்வது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கல்லில் இன்று 3-வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல மீன்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இன்று 31-வது நாளாக தொடர்ந்து ஒகேனக்கல் அருவி மற்றும் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடித்து வருகிறது.
இன்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்களை போலீசாரும், தீயணைப்பு படையினரும் திருப்பி அனுப்பினார்கள். ஒருசிலர் ஆர்வமிகுதியால் காவிரி ஆற்றின் கரையோரத்தில் நின்று தண்ணீரை தலைக்கு தெளித்தனர். சிலர் இறங்கி குளிக்கவும் செய்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கல், நாடார்கொட்டாய், ஊட்டமலை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மேடான பகுதிகளுக்கு இடம்பெயற தொடங்கிவிட்டனர்.
வெள்ளப்பெருக்கு காரணமாக வெளியூர் சுற்றுலா பயணிகள் யாரும் ஒகேனக்கல் வரவேண்டாம் என்று தர்மபுரி மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்து உள்ளது.