செய்திகள்

துணைவேந்தர் கணபதியிடம் பணம் கொடுத்து பதவியில் சேர்ந்த 62 பேராசிரியர்கள்

துணைவேந்தர் கணபதி நியமனம் செய்த 62 பேராசிரியர் பணியிடங்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளதால் அவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

மாலை மலர்

சென்னை:

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி நேற்று முன்தினம் காலை தனது வீட்டில் வைத்து ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடிபட்டார்.

உதவிப் பேராசிரியர் பணிக்கு சுரேஷ் என்பவரிடம் இருந்து லஞ்ச பணத்தை பெற்றபோது சாதாரண உடையில் தயாராக மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். அவருக்கு பணம் கொடுக்க இடைத்தரகராக செயல்பட்ட பேராசிரியர் தர்மராஜும் இந்த லஞ்ச வேட்டையின்போது சிக்கினார்.

லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் ரசாயனம் தடவிய நோட்டுகளை சுரேசிடம் கொடுத்து அனுப்பி இருந்ததால், அவர்களது வேட்டை மிக எளிதாக முடிந்தது. ஆனால் கிரிமினாலஜி பட்டப்படிப்பு படித்துள்ள துணைவேந்தர் கணபதியின் மனைவி சொர்ணலதா ரசாயனம் தடவி கொடுக்கப்பட்ட 50 நோட்டுகளில் 28 நோட்டுகளை கிழித்து கழிவறைக்குள்ளும், 22 நோட்டுகளை தனது உள்ளாடைக்குள்ளும் மறைத்தார்.

என்றாலும் போலீசார் அந்த ரூபாய் நோட்டுகளை சில மணி நேரம் போராடி மீட்டனர். இதையடுத்து துணைவேந்தர் கணபதியிடமும், பேராசிரியர் தர்மராஜிடமும் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவிப்பேராசிரியர்கள் பணி நியமனம் உள்பட பல்வேறு பணி நியமனங்களுக்கு லஞ்சம் வாங்கி கொண்டு துணைவேந்தர் கணபதி வேலை கொடுத்து இருப்பது உறுதியானது.

குறிப்பாக பாரதியார் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குனர் மதிவாணன் முக்கிய இடைத்தரகராக திகழ்ந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இந்த லஞ்ச வழக்கில் முதல் கட்டமாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில் முதல் குற்றவாளியாக துணைவேந்தர் கணபதி, இரண்டாவது குற்றவாளியாக பேராசிரியர் தர்மராஜ், மூன்றாவது குற்றவாளியாக தொலைதூர கல்வி இயக்குனர் மதிவாணன், 4-வது குற்றவாளியாக துணைவேந்தர் கணபதியின் மனைவி சொர்ணலதா சேர்க்கப்பட்டுள்ளனர். சொர்ணலதா மீது ஆதாரத்தை அழிக்க முயன்றதாக 201-வது பிரிவின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கணபதி, தர்மராஜ் இருவரிடமும் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடந்து முடிந்த நிலையில் அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் இருவரிடமும் கடந்த ஓராண்டாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சேகரித்து வைத்திருந்த தகவல்களை காண்பித்து விசாரணை நடத்தினார்கள்.

துணைவேந்தராக கடந்த 2016-ம் ஆண்டு கணபதி பொறுப்பேற்ற நாள் முதல் இந்த மாதம் வரை சுமார் 2 ஆண்டுகளில் அவர் 84 பேரை பல்வேறு பதவி இடங்களுக்கு பணி நியமனம் செய்துள்ளார். இந்த 84 பணி நியமனம், உண்மையிலேயே தகுதி அடிப்படையில் செய்யப்பட்டதா? அல்லது லஞ்சம் பெற்றுக் கொண்டு நிரப்பப்பட்டதா? என்று விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழக ஊழியர்கள் துணையுடன் இதற்கான ஆய்வை லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

முதல் கட்ட ஆய்வில் கணபதி நியமனம் செய்த 84 பேரில் 62 பணி நியமனத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இந்த 62 பேரிடமும் துணை வேந்தர் கணபதி பல லட்சம் ரூபாயை கணிசமான அளவில் கையூட்டாக பெற்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

உதவிப் பேராசிரியர்கள் பணி இட நியமனம் மட்டு மின்றி உதவிப் பேராசிரியர்களுக்கான பதவி உயர்வு, பேராசிரியர் பணி இடம் மற்றும் சிண்டிக்கேட் உறுப்பினர்கள் நியமனம் ஆகிய வற்றிலும் கணபதி முறைகேடுகள் செய்ததாக கூறப்படுகிறது. இவை தவிர பாரதியார் பல்கலைக்கழகத் தில் எஸ்.சி, எஸ்.டி. இட ஒதுக்கீட்டின் கீழ் செய்யப்பட்ட பணி நியமனங்களிலும் கணபதி தில்லுமுல்லு செய்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இந்த முறைகேடுகள் பற்றி முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

துணைவேந்தர் கணபதி நியமனம் செய்த 62 பேராசிரியர் பணியிடங்கள் மீது அனைத்து தரப்பினருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அந்த பணியிடங்களை உடனடியாக ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

அதுபோல பல்கலைக்கழக மூத்த பேராசிரியர்களும் இந்த களங்கத்தை துடைக்க வேண்டுமானால் தற்போது பணியில் இருக்கும் ஐகோர்ட்டு நீதிபதியை கொண்டு உரிய விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் உண்மையான நீதி கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.

2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் துணைவேந்தர் கணபதி ஒரே சமயத்தில் 80 இடங்களுக்கு பணி நியமனம் செய்தார். கல்வித் துறை அதிகாரிகள் எதிர்ப்பை மீறி இந்த பணி நியமனங்களை செய்தது தற்போது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பயோ டெக்னாலஜி துறையில் உதவிப் பேராசிரியர் பணிக்கு தன்னை நியமிக்க லட்சுமிபிரபா என்பவர் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதுபற்றி லட்சுமிபிரபா வடவள்ளி போலீசில் புகார் செய்தார்.

அதன் பிறகே துணைவேந்தர் கணபதியின் முறைகேடுகள் வெளியில் பேசப்பட்டது. எனவே கணபதி 2016-ம் ஆண்டு முதல் பணி நியமனம் செய்த அனைத்தும் விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளது.

கணபதியின் முறைகேடுகள் பற்றி இடைத்தரகர்களாக செயல்பட்டவர்களுக்குத்தான் முழுமையாக தெரியும். எனவே அடுத்தக் கட்டமாக தொலைதூர கல்வி இயக்குனர் மதிவாணனிடம் விசாரிக்க உள்ளனர். வேறு யார்-யார்? இடைத்தரகர்களாக இருந்தனர் என்ற விசாரணையும் நடந்து வருகிறது.

இதற்கிடையே கணபதியிடம் லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் பற்றிய பட்டியலும் தனியாக தயாரிக்கப்பட்டு வருகிறது. அவர்களது தகுதி பற்றி தனி விசாரணை நடத்தப்படும்.

முதல் கட்டமாக 62 பேரின் பணி நியமனம் பற்றிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அவர்கள் தகுதி இல்லாமல் லஞ்சம் கொடுத்து சேர்க்கப்பட்டிருந்தால் அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. #tamilnews