செய்திகள்

சத்தீஸ்கரில் 9 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்த தாக்குதலை 60 நக்சல்கள் இணைந்து நடத்தியதாக தகவல்

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் 9 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்த கோர தாக்குதலை 60 நக்சல்கள் இணைந்து நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #NaxalAttack #Chhattisgarh

மாலை மலர்

சத்தீஸ்கர் மாநிலத்தின் பல மாவட்டங்களில் நக்சல்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களை ஒடுக்கும் பணியில் சி.ஆர்.பி.எப், போலீஸ் அதிரடிப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சுக்மா மாவட்டத்தின் கிஸ்தாரம் பகுதியில் நேற்று முன்தினம் (13-ம் தேதி) சி.ஆர்.பி.எப் 212-வது பட்டாலியனைச் சேர்ந்த வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, மதியம் சுமார் 12:30 மணியளவில் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை நக்சல்கள் வெடிக்க வைத்தனர். இதனால் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் தூக்கி வீசப்பட்டது. அதன்பின் காயமடைந்த வீரர்கள் மீது நக்சல்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த கோர தாக்குதலில் 9 வீரர்கள் பலியானதோடு, 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

இந்த கோர தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த தாக்குதலை கிஸ்தாரம் கிராமத்தை சேர்ந்த நக்சல் குழுவினர் திட்டமிட்டு நடத்தியுள்ளதாக போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் சுமார் 60 நக்சல்கள் சேர்ந்து நடத்தியுள்ளதாகவும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.