சிறுவனை பெண் கடத்தி சென்ற காட்சி கேமராவில் பதிவாகியுள்ளது. 
செய்திகள்

மதனபள்ளி ரெயில் நிலையம் அருகே தூங்கிக் கொண்டிருந்த 6 வயது சிறுவனை கடத்திய பெண்

மதனபள்ளி ரெயில் நிலையம் அருகே தூங்கிக் கொண்டிருந்த 6 வயது சிறுவனை கடத்திய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

சித்தூர்:

கர்நாடக மாநிலம் முள்பாகல் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். துணி வியாபாரம் செய்வதற்காக குடும்பத்துடன் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளிக்கு வந்தார்.

ரெயில் நிலையம் அருகே கூடாரம் ஒன்று அமைத்து அதில் துணி வியாபாரம் செய்து அங்கேயே குடும்பத்துடன் கூடாரத்தில் தூங்கி கொண்டிருந்தார். அவருடன் அவரது மனைவியும், மகன் அசோக் (வயது6). ஆகியோர் தூங்கி கொண்டிருந்தனர்.

அதிகாலை கணவன்-மனைவி எழுந்து பார்த்த போது அருகில் படுத்திருந்த அசோக்கை காணவில்லை. அதிர்ச்சியடைந்த இருவரும் மகனை அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் மகனை காணவில்லை. இதையடுத்து ஆனந்த் மகன் காணாமல் போனது குறித்து சி.டி.எம். தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரெயில் நிலையம் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது ஒரு பெண் தூங்கி கொண்டிருந்த அசோக்கை யாருக்கும் தெரியாமல் எடுத்து செல்வது பதிவாகியிருந்தது.

சிறுவனை கடத்தி சென்ற பெண் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் தூஸ்பேட்டையை சேர்ந்த சாந்தம்மா என்பது தெரியவந்தது.

இவர் மீது திருப்பதி பலமநேர், பெங்களூரு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது.

அந்த பெண்ணிடம் இருந்து சிறுவனை மீட்க 2 தனிப்படை போலீசார் கோலார் மற்றும் மதனபள்ளி பகுதியில் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT