கரூர்:
வெள்ளியணை அருகே உள்ள பெருமாள்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் தனது மனைவி நாச்சம்மாளை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு, புலியூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு தனியார் சிமெண்டு ஆலை அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், கந்தசாமி-நாச்சம்மாளை துரத்தி வந்தனர்.
இதையடுத்து கண் இமைக்கும் நேரத்தில், அந்த மர்மநபர்கள் நாச்சம்மாளின் கழுத்தில் கிடந்த 6 பவுன் சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அப்போது இருவரும் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.