மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ள அனில் கும்ப்ளே பதவி காலம் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியோடு முடிகிறது.
இந்த நிலையில் புதிய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. கேப்டன் விராட் கோலிக்கும், அனில் கும்ப்ளேவுக்கும் கருத்து வேறுவாடு நிலவுவதாகவும், இதனால் தான் கும்ப்ளேவின் பதவி காலத்தை நீட்டிக்காமல் பயிற்சியாளர் தேர்வு நடக்கிறது என்றும் தகவல் வெளியானது.
ஆனால் அதை விராட் கோலி மறுத்தார். இதற்கிடையே பயிற்சியாளர் பதவிக்கு இந்திய முன்னாள் வீரர் ஷேவாக், லால்சந்த், ராஜ்புட், தோடா கணேஷ், ஆஸ்திரேலியாவின் டாம் மூடி, ரிச்சர்ட் பைபஸ் ஆகிய 6 பேர் விண்ணப்பித்துள்ளனர். அனில் கும்ப்ளே விண்ணப்பிக்கவில்லை. என்றாலும் அவரும் தேர்வில் இருக்கிறார்.
புதிய பயிற்சியாளர் பதவிக்கு நேர்காணல் வருகிற 7-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை லண்டனில் நடக்கிறது. நேர்காணலை தெண்டுல்கர், கங்குலி, லட்சுமண் ஆகியோரை கொண்ட குழு நடத்துகிறது. அனில் கும்ப்ளே, ஷேவாக் ஆகியோர் தற்போது லண்டனில் இருக்கிறார்கள். அவர்களிடம் நேரடியாக நேர்காணல் நடத்தும் மற்ற 4 பேரிடம் ஸ்கைப் மூலம் நேர்காணல் நடத்துகிறார்கள்.