திருச்சி:
சென்னையில் இருந்து திருச்சி வழியாக கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு புறப்பட்டு திருச்சி ஜங்ஷன் வந்தது. பிறகு மீண்டும் ரெயில் புறப்பட்டது. திண்டுக்கல் அருகில் சென்ற போது ரெயிலில் எஸ்.3 பெட்டியில் பயணம் செய்த கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் செட்டி யார்மடம் பகுதியைச் சேர்ந்த ராமராஜ் மனைவி மகேஸ்வரி (வயது 60) என்பவர் கழிவறைக்கு சென்றார்.
அப்போது வாசல் அருகே நின்றிருந்த வாலிபர் ரெயில் மெதுவாக சென்றதை பயன்படுத்தி மகேஸ்வரி கழுத்தில் கிடந்த 6 பவுன் செயினை பறித்துக் கொண்டு பிளாட்பாரத்தில் குதித்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து மகேஸ்வரி ரெயில்வே போலீசில் புகார் செய்தார். தப்பிய வாலிபர் மீண்டும் திண்டுக்கல்லில் இருந்து திருச்சிக்கு வரும் ரெயிலில் அல்லது மதுரைக்கு செல்லும் ரெயிலில் ஏறி தப்பி இருக்கலாம் என கூறப்பட்டது.
எனவே அனைத்து ரெயில் நிலையங்களுக்கும் செயின் பறித்து விட்டு தப்பிய வாலிபரின் அடையாளத்தை கூறி தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் ரெயில் நிலைய கண்காணிப்பு காமிராக்களில் வாலிபரின் உருவம் பதிவாகியுள்ளதா? என்றும் விசாரணை நடந்து வருகிறது.
ஓடும் ரெயிலில் பெண் பயணிடம் திருடன் செயினை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.