சென்னை:
இதற்கிடையே திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீரை விலைக்கு வாங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை சாலை, திருவள்ளூர், செங்குன்றம் சாலைப்பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இதற்காக திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை சாலையில் காந்திநகர், தங்கானூர், சிறுவானூர், புல்லரம்பாக்கம், கொசவன் பாளையம், கண்டிகை ஆகிய கிராமங்களிலும், திருவள்ளூர்- தாமரைப்பாக்கம் சாலையில் உள்ள மாதரை கண்டிகை, கீழனூர், வெள்ளியூர், ஈக்காடு கண்டிகை உள்ளிட்ட இடங்களிலும் நீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு தொட்டியிலும் 10 முதல் 20 விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் சேகரிக்கும் வகையில் குழாய் இணைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. பின்னர் அங்கிருந்து பெரிய குழாய்கள் மூலம் சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது.
அதன்படி சென்னைக்கு தினமும் 6 கோடி லிட்டர் தண்ணீர் விவசாய கிணறுகளில் இருந்து சப்ளை செய்யப்படுகிறது. விவசாய கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் குடிநீரை அளவீடு செய்வதற்காக தண்ணீர் அளவு மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.
இதில் மின் கட்டணத்தை பொதுப்பணித்துறை செலுத்தி கொள்ளவும் வாரந்தோறும் பணப்பட்டுவாடா செய்யவும் விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து நீரேற்று நிலைய அதிகாரிகள் கூறும்போது, “ குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை பகுதியில் 100 விவசாயிகளிடமும், திருவள்ளூர்- செங்குன்றம் சாலையில் 120-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடமும், குடிநீர் பெற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தினமும் 6 கோடி லிட்டர் குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது” என்றனர்.