விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் விளையாடிய டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது. அத்துடன், 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இதுவரை நடந்த 4 போட்டியிலும் இந்தியாவே வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கொழும்புவில் தொடங்கியது. மழை குறுக்கிட்டதால் டாஸ் போட தாமதம் ஏற்பட்டது. அதன்பின்னர், டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நிரொஷ்ன் டிக்வெல்லா மற்றும் உபுல் தரங்கா ஆகியோர் களமிறங்கினர். ஆட்டத்தின் 3-வது ஓவரில் டிக்வெல்லாவை வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார் புவனேஷ்வர் குமார். அதன்பின் களமிறங்கிய முனவீராவையும் 7-வது ஓவரில் பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார். அவரை தொடர்ந்து பொறுப்புடன் விளையாடிய உபுல் தரங்காவை பும்ரா வெளியேற்றினார். இதையடுத்து, 3 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்து தத்தளித்து வந்தது.
இதைத்தொடர்ந்து, திரிமன்னேவும் மேத்யூசும் இணைந்து விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். சிறப்பாக விளையாடிய திரிமன்னேவை புவனேஷ்குமார் அவுட்டாக்கினார். மேத்யூஸ் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் வெளியேறினார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி 122 ரன்களை சேர்த்தது.
அவரை தொடர்ந்து வந்த மற்ற வீரர்கள் யாரும் நிலைக்கவில்லை. எனவே, இலங்கை அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 238 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக திரிமன்னே 67 ரன்னும், மேத்யூஸ் 55 ரன்னும், உபுல் தரங்கா 48 ரன்னும் எடுத்தனர்.
இந்திய அணி சார்பில் புவனேஷ்வர் குமார் மிகவும் சிறப்பாக பந்துவீசி 9.4 ஓவர்களில் 42 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் விழ்த்தினார். பும்ரா 2 விக்கெட்டும், குல்தீப் யாதவ் மற்றும் சஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். ஒருநாள் போட்டிகளில் 100 ஸ்டம்பிங் என்ற புதிய சாதனையை மகேந்திர சிங் தோனி எட்டினார்.