செய்திகள்

குஜராத் 2-ம் கட்ட சட்டசபை தேர்தல்: 4 மணி வரை 58% வாக்குகள் பதிவு

குஜராத் சட்டசபை தேர்தலில் 93 தொகுதிகளுக்கு நடந்துவரும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 4 மணி நிலவரப்படி 58 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத்:

குஜராத் மாநில சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைந்ததும் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த 9-ம் தேதி 83 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 67 சதவிகித ஓட்டுகள் பதிவானதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 851 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்களில், 69 பேர் பெண்கள் ஆகும். 25,558 வாக்குச்சாவடிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு சற்று இன்று காலை தொடங்கியது. ஆண்கள் மற்றும் பெண்கள் ஆர்வமாக வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

இத்தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, முன்னாள் துணை பிரதமர் அத்வானி, மத்திய மந்திரி அருண் ஜெட்லி உள்ளிட்டோர் வாக்களித்தனர். 4 மணி வரையிலான நிலவரப்படி 58 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கட்டமாக பதிவான வாக்குகள் வரும் 18-ம் தேதி எண்ணப்படுகின்றன. வாக்குப்பதிவை ஒட்டி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT