செய்திகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: மதியம் 3 மணி நிலவரப்படி 57.16 சதவீதம் வாக்குகள் பதிவு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி 57.16 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாலை மலர்

சென்னை:

ஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் கமி‌ஷன் கடந்த மாதம் அறிவித்தது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டது. இவர்கள் கடந்த இரு வாரங்களாக ஆர்.கே.நகர் தொகுதி முழுக்க பிரசாரம் செய்து ஆதரவு திரட்டினார்கள்.நேற்று முன்தினம் பிரசாரம் நிறைவடைந்தது.

ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் உள்ளனர். இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கியது. 1,638 வாக்குச் சாவடி அலுவலர்கள் வாக்குப்பதிவு பணிகளை செய்தனர்.

காலையில் இருந்தே பொதுமக்கள் ஆர்வமுடன் வந்திருந்து வாக்களித்தனர். இதனால் 258 ஓட்டுச் சாவடிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. ஓட்டுப் பதிவு அனைத்தும் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டது.

இளைஞர்கள் மட்டுமின்றி முதல் தடவை வாக்களிப்பவர்களும் மிகவும் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். தொழிலாளர்கள், வியாபாரிகள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் ஆர்வமுடன் வந்து தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.

இந்நிலையில், மதியம் 3 மணி நிலவரப்படி 57.16 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கிய முதல் 1 மணி நேரத்தில், அதாவது 9 மணிக்கு 7.32 சதவீதம் வாக்குகளும், பகல் 1 மணி நிலவரப்படி 41.6 சதவீதம் வாக்குகளும் பதிவாகின. இதைத்தொடர்ந்து மதியம் 3 மணி நிலவரப்படி 57.16 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.