செய்திகள்

திருத்துறைப்பூண்டி அருகே போதைக்காக பஞ்சர் பசையை நுகர்ந்த 5 மாணவர்கள் வாந்தி - மயக்கம்

பள்ளி மாணவர்கள் போதைக்காக பஞ்சர் ஒட்ட பயன்படுத்தப்படும் பசையை நுகர்ந்து மயங்கி விழுந்த சம்பவம் திருத்துறைப்பூண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள அபிஷேக கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் சஞ்சய் (வயது 11).

இந்த நிலையில் சஞ்சய் நேற்று இரவு தனது நண்பர்களான தமிழ்பாலன் (11), முத்துக்குமார் (14), யுவராஜா (13), மதியரசன் (13) ஆகியோருடன் பேசி கொண்டிருந்தார். இவர்கள் 5 பேரும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5, 6-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

அப்போது மாணவர்கள் 5 பேரும் சைக்கிள் பஞ்சர் ஓட்ட பயன்படும் பசையை வைத்திருந்தனர். பின்னர் அந்த பசையை மூக்கில் வைத்து ஒவ்வொருராக நுகர்ந்தனர்.

பசையை நுகர்ந்து கொண்டே இருந்ததால் 5 பேருக்கும் போதை ஏற்பட்டது ஒரு கட்டத்தில் அவர்களுக்கு திடீரென வாந்தி ஏற்பட்டது. இதில் அவர்கள் வாந்தி எடுத்து நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

அடுத்தடுத்து 5 பேரும் மயங்கி விழுந்ததால் அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்களை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருத்துறைப்பூண்டி போலீசார், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 5 பேரிடமும் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் போதைக்காக பஞ்சர் ஓட்டும் பசையை மூக்கில் நுகர்ந்ததால் வாந்தி- மயக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.