சென்னை:
நாடு முழுவதும் ஒரே சீரான வரி முறையை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. ஜி.எஸ்.டி. என்னும் இந்த வரிமுறை தமிழகத்திலும் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது.
இந்த புதிய வரி விதிப்பு முறையால் பல்வேறு தொழில்களுக்கு கூடுதலாக வரியும், ஒருசில தொழில்களுக்கு வரி குறைப்பும் செய்யப்பட்டுள்ளது.
இதனால் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள ஏ.சி. ஆம்னி பஸ் ஆப்ரேட்டர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏ.சி. ஆம்னி பஸ்களுக்கு 5 சதவீதம் சேவை வரி தற்போது விதிக்கப்பட்டு உள்ளது.
ஏ.சி. ஆம்னி பஸ்சில் பயணம் செய்தால் டிக்கெட் கட்டணம் ரூ. 1000 என்றால் அதற்கு ரூ. 50 சேவை வரி செலுத்த வேண்டும். இது பயணம் செய்கின்ற ஒவ்வொரு பயணிகளின் கட்டணத்தோடு சேர்த்து வசூலிக்கப்படும்.
இது குறித்து கே.பி.என். பஸ் உரிமையாளர் நடராஜன் கூறியதாவது:-
ஏ.சி. ஆம்னி பஸ்களுக்கு 5 சதவீதம் சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பொருட்கள் பார்சல் சர்வீசுக்கு இருந்த 14 சதவீத வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
பார்சல் கட்டணம் ரூ. 750-க்கு மேலாக உள்ள பில்லுக்கும் 14 சதவீதம் வரி வசூலிக்கப்பட்டு வந்தது. அவை தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
வீட்டு சாமான்கள் இடம் மாற்றுவதற்கு வசூலிக்கப்பட்ட 15 சதவீத வரி தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வரவேற்கக் கூடியதாகும்.
இதுவரையில் முறைப்படுத்தப்படாமல் இருந்த தொழில்கள் மீதான வரி தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது என்று கொளத்தூர் குமார் தெரிவித்தார்.