நாகர்கோவில்:
புதுக்கடை அருகே நெட்ட மாவிளையைச் சேர்ந்தவர் சுலேச்சனா, (வயது 48). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த் ரூபி என்பவரும் ஆலயத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக் கிளில் வந்த 2 நபர்கள் சுலேச்சனா கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்தனர். இவர், திருடன்... திருடன்... கூச்சலிட்டார். அதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
இது குறித்து புதுக்கடை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ் பெக்டர்கள் சாலமோன் ராஜன், நீலகண்ட பிள்ளை ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
சுலேச்சனாவிடம் கொள்ளையர்கள் குறித்த அடையாளங்களை கேட்டறிந்த போலீசார் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் கொள்ளையர்கள் யாரும் சிக்கவில்லை.
செயின் பறிப்பு நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் கொள்ளையர்கள் குறித்த அடையாளங்கள் தெளிவாக பதிவாகவில்லை.
போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். திருட்டு சம்பவம் குறித்து சுலேச்சனா கொடுத்த புகாரின்பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.