செய்திகள்

மும்பை அருகே புறநகர் ரெயில் பெட்டிகள் தடம்புரண்ட விபத்தில் 5 பேர் காயம்

மும்பையின் சத்ரபதி சிவாஜி துறைமுக ரெயில் நிலையத்திலிருந்து அந்தேரிக்கு சென்று கொண்டிருந்த புறநகர் ரெயில் தெற்கு மாஹிம் அருகே இன்று மணியளவில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.


மும்பை:

மும்பையின் சத்ரபதி சிவாஜி துறைமுக ரெயில் நிலையத்திலிருந்து அந்தேரிக்கு புறநகர் ரெயில் இயக்கப்படுகிறது. இன்று காலை 9:55 மணியளவில் மேற்கு மாஹிம் அருகே ரெயில் சென்று கொண்டிருந்த போது திடீரென நான்கு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கி தடம்புரண்டன. இந்த விபத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர். இந்த விபத்து காரணமாக வதாலா - அந்தேரி இடையேயான ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த விபத்தில் காயமடைந்த ஐந்து பேருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முசாபர் நகர் அருகே உத்கல் விரைவு ரெயில் விபத்துக்குள்ளானதில் 21 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நடந்து அடுத்த இரண்டு நாட்களுக்குள் டெல்லியிலிருந்து அஸம்கார் செல்லும் கைபியாத் விரைவு ரெயில் உ.பி. மாநிலம் கான்பூர் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 60 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.