ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரியாசி மாவட்டத்தில் உள்ள தப் பனாசா கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த ஒரு கட்டிடம் எதிர்பாராத விதமாக தீடிரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் அப்பகுதியில் இருந்த சிலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த போலீசார் மீட்புப்பணிகளை தொடங்கினர். இடிபாடுகளில் இருந்து 13 பேரை போலீசார் மீட்டனர். அதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இன்னும் சிலரது நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து போலீசார் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.