செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் தென் மாவட்டங்களில் 5 நாட்கள் கடல் கொந்தளிப்பு ஏற்படும்

தென் தமிழக கடலில் இன்று முதல் 5 நாட்கள் ஆழி பேரலை ஏற்படுமென்றும் இது சுமார் 2 மீட்டர் முதல் 3 மீட்டர் உயரத்திற்கு எழும்பும் எனவும் தேசிய கடல் ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாலை மலர்

நாகர்கோவில்:

மத்திய அரசின் இயற்கை மற்றும் கனிம வளத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய கடல் ஆய்வு நிறுவனம் ஐதராபாத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம் கடலில் ஏற்படும் மாற்றங்கள், இயற்கை சீற்றங்கள், சுனாமி எச்சரிக்கை போன்றவற்றை முன்கூட்டியே கண்டறிந்து தெரிவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் குஜராத், மராட்டியம், கோவா, கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு மற்றும் தென் தமிழக பகுதிகளில் கடல் கொந்தளிப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளது.

குறிப்பாக தென் தமிழக கடலில் ஆழி பேரலை ஏற்படுமென்றும் இது சுமார் 2 மீட்டர் முதல் 3 மீட்டர் உயரத்திற்கு எழும்பும் எனவும் கூறி உள்ளது. அதோடு கடல் மிகவும் சீற்றமாக காணப்படும். இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.

இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள், அவர்களின் படகுகள், மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும்படியும் அறிவுறுத்தி உள்ளது.

தேசிய கடல் ஆய்வு நிறுவனத்தின் முன்எச்சரிக்கை தகவல் மத்திய அரசு மூலம் மாநில அரசுகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை மாநில அரசுகள் கடலோர கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் தென் தமிழக கடலோர மாவட்டங்களுக்கு மாநில மீன்வளத்துறை அதிகாரிகள் இத்தகவலை தெரிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர்.

குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி முதல் நீரோடி வரை 42 கடற்கரை கிராமங்கள் உள்ளன. அனைத்து கிராமங்களுக்கும் மீன்வளத்துறை அதிகாரிகள் இத்தகவலை தெரிவித்துள்ளனர். இன்று காலை முதல் யாரும் கடலுக்குசெல்ல வேண்டாம்.

கடலில் குளிப்பதையும் தவிர்க்க வேண்டும், மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லவும் அறிவுறுத்தி உள்ளனர். கடல் சீற்றம் மற்றும் ஆழி பேரலை ஏற்படும்போது சூறாவளி காற்றும் வீச வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளதால் கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்ப வேண்டுமென்றும் மீன்வளத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். #tamilnews