கொழிஞ்சாம்பாறை:
கருப்பு பணம் மற்றும் கள்ளநோட்டுக்களை ஒழிக்க மத்திய அரசு கடந்த நவம்பர் 8-ந்தேதி முதல் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தது.
பொதுமக்கள் தங்களிடம் உள்ள பணத்தை மாற்றிக்கொள்ள காலஅவகாசம் வழங்கியது. அதன்படி பொதுமக்கள் தங்கள் பணத்தை வங்கியில் இருப்பு வைத்தும், பணத்தை மாற்றியும் வந்தனர்.
இந்தநிலையில் அதற்கான காலக்கொடு முடிவடைந்தது. இனி செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பணத்தை வைத்திருப்பது குற்றம் என்று அரசு அறிவித்தது.
இருந்தாலும் நாட்டின் பல பகுதிகளில் சமூக விரோதிகளிடம் இருந்து கோடிக்கணக்கான பழைய செல்லாத நோட்டுக்களை போலீசார் பறிமுதல் வருகிறார்கள்.
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு தங்களிடம் உள்ள பணத்தை மாற்றிக்கொள்ள மத்திய அரசு கால நீட்டிப்பு வழங்கியது. உலகின் பலநாட்டில் உள்ள இந்தியர்கள் தங்களிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொண்டனர். வெளிநாடு வாழ் இந்தியர்களின் கோரிக்கையை ஏற்று ரிசர்வ் வங்கி சிறப்பு கால அவகாசம் வழங்கியுள்ளது.
இந்த கால அவகாசத்தை பயன்படுத்திய கும்பல் கருப்பு பணத்தை மாற்றிக்கொள்ள சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மன்னா டி.எஸ்.பி. மோகனசந்திரன் இன்று காலை பெருந்தல்மன்னா பஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுட்டார்.
அப்போது மகாராஷ்டிரா மாநில பதிவெண் கொண்ட ஒரு சொகுசு காரும் அதன்பின்னர் அதே மாநில பதிவெண் கொண்ட மோட்டார் சைக்கிளும் வந்தன. அதனை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.
இதில் சந்தேகமடைந்த போலீசார் அவர்களது வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது காரின் சீட்டுக்கு அடியிலும், மோட்டார் சைக்கிள் சீட்டுக்கு அடியிலும் கட்டுக்கட்டாக செல்லாத பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் 3¼ கோடி இருந்தன. பணத்தையும், காரையும் பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் மலப்புரம் மாவட்ட நாதாபுரத்தை சேர்ந்த சம்சுதீன் (வயது 42), கொளத்தூரை சேர்ந்த முகமது (22), முகமது நசீப் (26), கோழிக்கோட்டை சேர்ந்த விஜூ (37), பசீம் (38) ஆகியோர் என்பதும் தெரியவந்தது.
அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பழைய நோட்டுக்களை மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கி சிறப்பு காலக்கெடு வழங்கியுள்ளது.
உள்நாட்டில் சட்ட விரோதமாக பணத்தை பதுக்கி வைத்தவர்களிடம் கமிஷன் அடிப்படையில் செல்லாத நோட்டுக்களை வாங்கி மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து சேலம், ஈரோடு, கோவை, பாலக்காடு வழியாக கேரளா கொண்டு வந்ததும், கேரளாவில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்தி அங்குள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலமாக பணத்தை ரிசர்வ் வங்கி மூலம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இந்த பணத்தை எங்கிருந்து யாரிடம் பெற்றார்கள்? எந்த நாட்டுக்கு யாருக்கு கடத்த முயன்றனர்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.