இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. சொந்த மண்ணில் இலங்கையை புரட்டியெடுத்து வரும் இந்திய அணி முதல் 3 ஆட்டங்களில் முறையே 9 விக்கெட், 3 விக்கெட், 6 விக்கெட் வித்தியாசங்களில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது.
இந்த நிலையில் இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த போட்டியின் முடிவு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்ற போதிலும் வெற்றிப்பயணத்தை தொடருவதில் இந்திய வீரர்கள் படுதீவிரமாக இருக்கிறார்கள். நடப்பு தொடரில் இதுவரை மனிஷ் பாண்டே, ரஹானே, குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர் ஆகியோருக்கு வாய்ப்பு கிட்டவில்லை. இவர்களில் சிலர் இன்றைய ஆட்டத்தில் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய விக்கெட் கீப்பர் டோனிக்கு இது 300-வது ஒருநாள் போட்டியாகும். இந்த மைல்கல்லை எட்டும் 6-வது இந்தியர் என்ற பெருமையை பெறும் டோனி, சிறப்பு வாய்ந்த இந்த ஆட்டத்தில் ரசிகர்களுக்கு விருந்து படைப்பாரா என்ற ஆவல் உருவாகியுள்ளது.
ஆடுகளத்தன்மையை பரிசோதிக்கிறார், இலங்கை பொறுப்பு கேப்டன் மலிங்கா.
அதே சமயம் தொடர்ச்சியான தோல்விகள், தேர்வு குழுவினர் ராஜினாமா, ரசிகர்கள் கலாட்டா என்று இலங்கை அணிக்கு சோதனை மேல் சோதனை வந்து கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அணி மெதுவாக பந்து வீசிய விவகாரத்தில் இலங்கை கேப்டன் தரங்காவுக்கு இரண்டு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக கபுகேதரா கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரும் இப்போது முதுகுவலியால் அவதிப்படுவதால் எஞ்சிய தொடரில் இருந்து விலகி இருக்கிறார். விரலில் ஏற்பட்ட காயத்தால் டெஸ்ட் கேப்டன் தினேஷ் சன்டிமாலும் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
இதையடுத்து இந்த ஆட்டத்தில் இலங்கை அணியை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனஞ்ஜெயா டி சில்வா, முனவீரா அணிக்கு கூடுதலாக அழைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் வீறுநடையை இலங்கை அணியால் தடுத்து நிறுத்த முடியுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். எஞ்சிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே 2019-ம்ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியில் இலங்கை அணி தவித்து கொண்டு இருக்கிறது.
இலங்கை கேப்டன் மலிங்கா நிருபர்களிடம் கூறுகையில், ‘நாங்கள் சில ஆட்டங்களில் தோற்று இருக்கிறோம். ஆனாலும் எங்கள் அணியில் இன்னும் திறமையான இளம் வீரர்களும், அனுபவ வீரர்களும் இருக்கிறார்கள் என்றே உணர்கிறேன். இந்த முறை மூத்த வீரர்கள் பொறுப்புடன் விளையாடி இளம் வீரர்களுக்கு நம்பிக்கையை அளிக்க வேண்டும். எங்களால் சரிவில் இருந்து மீண்டு வர முடியாது என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் எங்களால் இந்த நிலைமையை மாற்றிகாட்ட முடியும்’ என்றார். மலிங்கா இந்த ஆட்டத்தில் ஒரு விக்கெட் எடுத்தால் அவரது விக்கெட் எண்ணிக்கை 300 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மைதானத்தில் இந்திய அணி இலங்கைக்கு எதிராக 31 ஒரு நாள் போட்டியில் விளையாடி அதில் 13-ல் வெற்றியும், 15-ல் தோல்வியும் கண்டுள்ளது. 3 ஆட்டத்தில் முடிவில்லை.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், கேதர்ஜாதவ் அல்லது மனிஷ் பாண்டே அல்லது ரஹானே, டோனி, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல் அல்லது குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர்குமார் அல்லது ஷர்துல் தாகூர்.
இலங்கை: முனவீரா, நிரோஷன் டிக்வெல்லா, குசல் மென்டிஸ், திரிமன்னே, மேத்யூஸ், திசரா பெரேரா, ஸ்ரீவர்த்தனே, அகிலா தனஞ்ஜெயா, மலிங்கா (கேப்டன்), விஷ்வா பெர்னாண்டோ, சமீரா.