வடமதுரை:
திண்டுக்கல் அருகே உள்ள சிலுவத்தூர் ராஜக்காபட்டியைச் சேர்ந்த நாகேஸ்வரன் மகன் பாலாஜி (வயது 22). இவரது தந்தை கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். தாயார் சரஸ்வதி பாலாஜியையும், அவரது தம்பியையும் கூலி வேலை செய்து படிக்க வைத்தார். பாலாஜி 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 497 மதிப்பெண்களும், 12-ம் வகுப்பில் 1100-க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்தார்.
எப்போதும் பேனாவும் புத்தகமும் கையில் வைத்துக் கொண்டு ஏதாவது எழுதியபடி இருப்பாராம். இவரைப் போலவே அவரது தம்பியும் நன்றாக படிக்கக்கூடியவர்.
மேலும் பாலாஜி தனக்குத்தானே பேசி மன நலம் பாதிக்கப்பட்டவர் போல் அடிக்கடி சிரித்துக் கொள்வாராம். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வடமதுரை அருகே உள்ள சந்தான வர்த்தினி ஆற்றின் கரையோரம் வந்த அவர் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் பாலாஜியை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.