செய்திகள்

உ.பி. மாநில பாராளுமன்ற இடைத்தேர்தலில் 40 சதவீதம் வாக்குப்பதிவு

உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்குட்பட்ட கோரக்பூர், புல்பூர் பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் சுமார் 40 சதவீதம் வாக்குகள் பதிவாகின. #LokSabhaelection #gorakhpur #phulpur

மாலை மலர்

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியதை தொடர்ந்து அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக யோகி ஆதித்யாநாத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பதவி ஏற்றார். துணை முதல் மந்திரிகளாக கேஷவ் பிரசாத் மவுரியா மற்றும் தினேஷ் சர்மா ஆகியோரும் பதவி ஏற்று கொண்டனர்.

இவர்களில் யோகி ஆதித்யாநாத், கேஷவ் பிரசாத் மவுரியா ஆகியோர் தாங்கள் வகித்துவந்த பாராளுமன்ற மக்களவை பதவியை ராஜினாமா செய்துவிட்டு உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபையின் மேலவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டு இந்த பதவிகளை ஏற்றுக்கொண்டனர்.

இதனால், யோகி ஆதித்யாநாத் எம்.பி.யாக பதவி வகித்த கோரக்பூர் பாராளுமன்ற தொகுதி மற்றும் கேஷவ் பிரசாத் மவுரியாவின் புல்பூர் பாராளுமன்ற தொகுதி ஆகியவற்றுக்கு மார்ச் 11-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.

இந்தத் தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதிக் கட்சி ஆகியவற்றிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதையடுத்து, இந்த இரு தொகுதிகளிலும் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. 

கோரக்பூர் தொகுதியில் யோகி ஆதித்யாநாத், புல்பூர் தொகுதியில் துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோர் வாக்களித்தனர். இன்று மாலை வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் கோரக்பூர் தொகுதியில் 43 சதவீதம் வாக்குகளும், புல்பூர் தொகுதியில் 37.39 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.

இன்று பதிவான வாக்குகள் 14-ம் தேதி எண்ணப்பட்டு, அன்று மாலைக்குள் முடிவுகள் வெளியாகும். #tamilnews #LokSabhaelection #gorakhpur #phulpur