நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் தாக்கியபோது கடலுக்கு சென்ற ஏராளமான மீனவர்கள் மாயமானார்கள்.
மாயமான மீனவர்களில் பலர் கேரளாவின் கொச்சி துறைமுகப்பகுதியில் கரை ஒதுங்கினர். இதுபோல 100-க்கணக்கானோர் வெளிமாநிலங்களிலும் கரை ஒதுங்கினர். அவர்கள் சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்டனர். இதற்கிடையே இன்னும் கரை திரும்பாத மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இதற்கிடையே கேரளா மற்றும் குமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு சென்றவர்களில் ஒக்கி புயலில் சிக்கி பலியானவர்களின் பிணங்கள் கேரள கடல் பகுதியில் கரை ஒதுங்கி வருகிறது. கடலில் இறந்து பல நாட்களுக்கு பிறகு உடல்கள் கரை ஒதுங்கி இருப்பதால் அதனை அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. இதில் திருவனந்தபுரத்தில் 7, எர்ணாகுளத்தில் 6, மலப் புறத்தில் 3, திருச்சூரில் 2, கொல்லத்தில் ஒரு உடல் உள்ளன. இது தவிர கோழிக்கோடு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, கொயிலாண்டி ஆஸ்பத்திரிகளில்23 உடல்கள் என மொத்தம் 42 உடல்கள் அடையாளம் காணமுடியாத நிலையில் உள்ளது.
இறந்து போனவர்களின் உறவினர்கள் யார், யார்? என்பதை கண்டறிய அரசும், ஆஸ்பத்திரி நிர்வாகமும் பல்வேறு ஏற்பாடுகள் செய்து உள்ளது.
அதன்படி இறந்தவர்கள் உடல்களை அடையாளம் காண தற்போது டி.என்.ஏ. பரி சோதனை முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஒரு உடல் குமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த ஆன்டனி ராஜ் என்பவருக்கு சொந்தமானது என்பது டி.என்.ஏ. பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் இருந்து மாயமான மீனவர்களின் உறவினர்களுக்கும் திருவனந்தபுரம் மற்றும் கேரள அரசு ஆஸ்பத்திரிகளில் வைக்கப்பட்டுள்ள உடல்கள் பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே அவர்களும் அங்கு சென்று உடல்களை பார்வையிட்டு வருகிறார்கள்.