திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உப்பாறு அணை உள்ளது. கடந்த ஆண்டு அந்த அணை மற்றும் கால்வாய் ரூ.7 கோடியே 60 லட்சத்தில் தூர்வாரப்பட்டது.
தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் இந்த பகுதியில் அணை மற்றும் கால்வாய் தூர்வாரப்பட்டதால் தண்ணீர் பிரச்சினை தீரும் என்று விவசாயிகள், பொதுமக்கள் நம்பினர்.
வடகிழக்கு பருவமழை பல இடங்களில் பெய்தபோதும் இந்த பகுதியில் போதிய மழை இல்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு குடிநீருக்கு திருமூர்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விட்டு அதில் இருந்து கால்வாய் மூலம் தண்ணீர் கிடைக்க அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் குடிநீருக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தண்ணீர் திறந்து விடவில்லை என்றால் உப்பாறு அணைப்பகுதியில் உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று அனுமதி கேட்டனர். ஆனால் போலீசார் இதற்கு அனுமதி மறுத்துவிட்டனர்.
அப்போது பொதுமக்கள் கூறும்போது, விவசாயத்துக்கு தண்ணீர் கேட்டு போராடவில்லை. பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் குடிக்க மட்டுமே தண்ணீர் கேட்டு போராட்டம் நடத்துகிறோம் என்றனர்.
போலீசார் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடும்படி கூறினர். ஆனால் பொதுமக்கள் இதனை ஏற்கவில்லை. இதனையடுத்து போலீசார் 3 பெண்கள் உள்பட 42 பேரை கைது செய்தனர்.