கைது 
செய்திகள்

சிறுமிகளின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பரப்பிய 41 பேர் கைது

கேரளாவில் கொரோனா ஊரடங்கின் போது சிறுமிகளின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பரப்பிய 41 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

கேரளாவில் கொரோனா ஊரடங்கின் போது பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகம் நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து மாநில அரசு போலீஸ் ஏ.டி.ஜி.பி. மனோஜ் ஆபிரகாம் தலைமையில் தனிப்படை அமைத்தது. அவர்கள் இது தொடர்பான புகார்களை திரட்டினர். இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 227 வழக்குகள் பதிவாகின.

இதில் அதிகபட்சமாக மலப்புரம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் இருந்து புகார்கள் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கேரள போலீசார் ஆபரேசன் பி ஹன்ட்டை தொடங்கினர்.

இதில் கேரளா முழுவதிலும் இருந்து 41 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இவர்களில் சாப்ட்வேர் என்ஜினீயரும் ஒருவர். அனைவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து லேப்டாப், செல்போன்கள் மற்றும் பல்வேறு எலக்ட்ரானிக் உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.

கைதானவர்கள் பலரும் சிறுமிகளின் ஆபாச படங்களை பார்த்தவர்கள் மற்றும் அதனை சமூக வலைதளங்களில் பரப்பியவர்கள் ஆவர். வாட்ஸ்அப், இன்ஸ்டாகிரம் போன்றவற்றில் இவற்றை பரப்பி உள்ளனர்.

ஆபாச படங்களில் பரவும் கேரளாவில் உள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் படமாக்கப்பட்டவை. ஆபாச படங்களில் கேரள சிறுமிகளும் உள்ளனர். இதனையும் போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.

எனவே இந்த சம்பவங்களில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கும் என்று போலீசார் கருதுகிறார்கள். அவர்களையும் பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என ஏ.டி.ஜி.பி. மனோஜ் ஆபிரகாம் தெரிவித்தார்.