வெறிச்சோடிய டி நகர் ரெங்கநாதன் தெரு 
செய்திகள்

தி.நகர் ரங்கநாதன் தெரு-பாண்டிபஜாரில் 400 கடைகள் இன்று மூடப்பட்டன

கொரோனா பீதியால் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியான தி.நகர் ரங்கநாதன் தெரு மற்றும் பாண்டிபஜாரில் 400 கடைகள் மூடப்பட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், தியேட்டர்கள் ஆகியவற்றை வருகிற 31-ந்தேதி வரையில் மூடி வைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நேற்று முன்தினம் மாலையில் இதற்கான அறிவிப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதனை ஏற்று வணிக வளாகங்கள், தியேட்டர்கள் ஆகியவை நேற்றில் இருந்து மூடப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் அடுக்கு மாடிகளை கொண்ட பெரிய ஜவுளி நிறுவனங்கள் தங்களது கடைகளை மூடவில்லை. இதுபோன்ற கடைகள் அனைத்தும் சென்னையில் திறந்து இருந்தன.

புரசைவாக்கத்தில் உள்ள பிரபல ஜவுளி கடை நேற்று வழக்கம்போல இயங்கியது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று கடையை மூடச் சொல்லி வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து அந்த கடை மூடப்பட்டிருந்தது. சில மணி நேரங்களில் கடை மீண்டும் திறக்கப்பட்டது. இதன் காரணமாக மாநகராட்சி அதிகாரிகள் மீண்டும் அந்த கடைக்கு சென்று சீல் வைத்தனர்.

இதைத் தொடர்ந்து இன்று காலை அரசின் உத்தரவை அனைத்து வணிக வளாகங்களும் பின்பற்றுகின்றனவா? என்பது பற்றி ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் தி.நகரில் இன்று அதிரடி ஆய்வை நடத்தினர்.

அப்போது தி.நகர் ரங்கநாதன் தெரு, உஷ்மான் ரோடு, பாண்டி பஜார் உள்ளிட்ட இடங்களில் அனைத்து பெரிய கடைகளும் திறந்திருந்தன. அதனுடன் அப்பகுதியில் உள்ள சிறிய கடைகளையும் வியாபாரிகள் திறந்து வைத்திருந்தனர்.

இந்த பகுதிகளில் எப்போதுமே பொருட்கள் வாங்க மக்கள் அலைமோதுவார்கள். இதனால் கூட்ட நெரிசலும் காணப்படும். கொரோனா பீதியால் தடுப்பு நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள கடைகளை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதன்படி 400 கடைகள் இன்று மூடப்பட்டன.

திடீரென அனைத்து கடைகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதால் வியாபாரிகள் தவித்தனர். பெரிய கடைகளில் பணி புரிபவர்களுக்கு மாதச் சம்பளம் வழங்கப்படும் நிலையில் பலர் சிறிய கடைகளில் தினக் கூலிகளாகவும் பணிபுரிகிறார்கள்.

ஒரு கடைக்கு 10 பேர் வரை தினக்கூலிகளாக பணிபுரிந்து வருகிறார்கள்.

தி.நகர் ரங்கநாதன் தெரு மற்றும் பாண்டி பஜார் பகுதிகளில் நூற்றுக்கணக்கான சிறிய கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் பணிபுரியும் அனைவரும் வழக்கம்போல வேலைக்கு வந்திருந்தனர். ஆனால், எந்த கடைகளையும் திறக்கக்கூடாது என்று மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டதால் ஊழியர்கள் அனைவரும் வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.

சிறிய கடைகளை வைத்திருப்போர்கள் 31-ந்தேதி வரையில் கடைகள் மூடப்பட்டிருந்தால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், இந்த கடைகளை நம்பி உள்ள தினக்கூலி பணியாளர்களும் பாதிக்கப்படுவார்கள் எனவும் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

இதையடுத்து இதற்கு மாற்று வழியாக என்ன செய்யலாம் என்பது பற்றி ஆலோசித்து முடிவெடுக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக இன்று மாலை சென்னை மாநகராட்சி சிறுகடை வியாபாரிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்துகிறார்கள். அப்போது சிறு வியாபாரிகளின் நலன் கருதி சிறிய கடைகளை மட்டும் திறக்க அனுமதிக்கலாமா? என்பது பற்றி முடிவெடுக்கப்படுகிறது.

அதே நேரத்தில் அடுக்குமாடிகளை கொண்ட பிரபல ஜவுளி கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் அனைத்தையும் 31-ந்தேதி வரை கட்டாயம் திறக்கக்கூடாது என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தி.நகர் பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதால் ஆள் நடமாட்டம் இல்லாமல் அப்பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. தி.நகர் ரெங்கநாதன் தெருவில் ‘பந்த்’ நேரத்தில் மூடப்பட்டு இருப்பது போன்று வரிசையாக கடைகள் மூடப்பட்டு இருப்பதால் ஆள்இன்றி காட்சி அளிக்கிறது.

இதுபோன்ற உஷ்மான் ரோடு, பாண்டிபஜார் தியாகராய தெரு உள்ளிட்ட பகுதிகளும் காணப்படுகின்றன.

இதுபற்றி வியாபாரி ஒருவர் கூறும்போது, திடீரென கடைகளை மூட உத்தரவிட்டு இருப்பதால் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடமும் வியாபாரிகள் முறையிட்டனர்.

இதற்கு பதில் அளித்த மாநகராட்சி அதிகாரிகள் வியாபாரிகளிடம் உரிய விளக்கம் அளித்தனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றியும் அது பரவினால் தடுத்து நிறுத்த முடியாது என்றும் உயிரின் முக்கியத்துவம் கருதியே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இதனை வியாபாரிகள் ஏற்றுக்கொண்டனர்.

இருப்பினும் இந்த வி‌ஷயத்தில் அரசு விரைந்து முடிவெடுத்து தங்களது வாழ்வாதாரத்தை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.