அமிர்தசரஸ்:
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள வாகாவில் இந்தியா - பாகிஸ்தான் எல்லை பகுதி நுழைவு வாயில் உள்ளது. இந்த இடத்தில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் சாவடிகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இங்கு தினமும் தங்கள் நாட்டு கொடிகளை ஏற்றி இரு நாட்டு வீரர்களும் ராணுவ அணிவகுப்பு நடத்துவது வழக்கமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் வாகா எல்லையை ஒட்டி உள்ள அடாரி என்ற இடத்தில் இந்தியா 350 அடி உயரம் கொண்ட கொடி கம்பத்தை கடந்த மார்ச் மாதம் அமைத்தது. அதில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. சர்வதேச விதிமுறைகளை மீறி இந்த கொடி கம்பம் அமைக்கப்படுவதாக பாகிஸ்தான் அப்போது கூறியது.
தற்போது இதற்கு போட்டியாக பாகிஸ்தான் வாகா எல்லையில் இதைவிட உயரமான கொடி கம்பத்தை அமைத்து வருகிறது. இந்த கம்பத்தின் உயரம் 400 அடியாகும். அதாவது இந்திய கொடி கம்பத்தைவிட 50 அடி உயரம் அதிகம் கொண்டதாக உள்ளது.
இந்த கொடி கம்பத்தை சீனா ரூ.7 கோடி செலவில் அமைத்து கொடுக்கிறது. வருகிற 14-ந்தேதி பாகிஸ்தான் சுதந்திர தினத்தன்று அதில் கொடியேற்றப்படுகிறது. இந்த கொடிகம்பம் அமைத்திருப்பதற்கு இந்தியா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொடிகம்பத்தின் உச்சியிலும், மற்ற பகுதிகளிலும் ரகசிய கேமராக்களை பொருத்தி இந்தியாவை உளவு பார்க்க இருப்பதாக இந்தியா சந்தேகிக்கிறது. எனவே இந்தியா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.