ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள டால் ஏரி மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும். இந்த ஏரியில் படகு வீடுகளில் சுற்றி வருவது சுற்றுலா பயணிகளுக்கு புத்துணர்ச்சியை தரும்.
இந்நிலையில், நேற்று மாலை டால் ஏரியில் ஏராளமான படகு வீடுகளில் சுற்றுலா பயணிகள் பொழுதை போக்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென பலத்த காற்று வீசியது. இதனால் ஏரியில் மிதந்து கொண்டிருந்த படகு வீடுகள் ஆட்டம் போட தொடங்கின. இதனால் அதில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் அலறினர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார், அங்கு விரைந்து சென்று, படகு வீடுகளில் சிக்கித் தவித்த 40க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்டனர்.
இதுகுறித்து ஸ்ரீநகர் கிழக்கு மண்டல எஸ்.பி ஷேக் பைசல் கூறுகையில், ''நேற்று மாலை முதல் டால் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்று வீச தொடங்கியது. இதனால் ஏரியில் பயணம் செய்த ஷிகாரா படகு வீடுகள் பயங்கரமாக ஆடி அசைந்தன. அதில் பயணம் செய்த பலர் அலறினர்.
தகவலறிந்து படகு வீடுகளில் சிக்கித் தவித்தவர்களை அழைத்து வருவதற்காக மோட்டார் படகுகள் கொண்டு செல்லப்பட்டன. அதன்மூலம் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்'' என தெரிவித்துள்ளார்.