குஜராத்தில் வருகிற 8-ந்தேதி டெல்லிமேல்சபை எம்.பி.க்கள் 3 பேரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பாக அந்த கட்சியின் தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி ஸ்ருமிதிராணி, காங்கிரசில் இருந்து விலகிய பல்வந்த் ராஜ்புத் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.
காங்கிரஸ் சார்பாக சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமதுபடேல் போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலில் பா.ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 3 பேரும் வெற்றிபெறுவதற்காக பா.ஜனதா கட்சி குதிரைபேரம் நடத்து வருவதாகவும், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுப்பதாகவும் காங்கிரஸ் சார்பில் குற்றச்சாட்டு கூறப்பட்டது.
மேலும் காங்கிரசில் இருந்து 6 எம்.எல்.ஏக்கள் விலகி பா.ஜனதாவில் சேர்ந்தார்கள். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 44 பேர் குஜராத்தில் இருந்து அழைத்து வரப்பட்டு பெங்களூரு அருகே பிடதியில் உள்ள ஈகிள்டன் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்த கர்நாடக மின்சாரத்துறை மந்திரி சிவகுமார் வீட்டில் கடந்த 4 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
சோதனை முடிந்ததும் சொகுசு விடுதிக்கு சென்ற கர்நாடக மந்திரி சிவகுமார் எம்.எல்.ஏக்களை சந்தித்தார். அதன் பிறகு எம்.எல்.ஏக்கள் கர்நாடக கவர்னர் வாஜூபாய்வாலாவை சந்தித்தனர்.
பின்னர் விதான் சவுதா வந்து அங்கு காந்தி சிலை முன்பு போட்டோ எடுத்துக் கொண்டனர். அதன் பிறகு கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர், மந்திரி சிவகுமார் உள்ளிட்ட பலருக்கு நன்றி தெரிவித்தனர்.
இன்று இந்த சொகுசு விடுதியில் எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடக்கிறது. கூட்டம் முடிந்த பிறகு அவர்கள் அனைவரும் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்கள். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி, எம்.பி. தேர்தலில் போட்டியிடும் அகமதுபடேல் மற்றும் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களை சந்தித்து பேசுகிறார்கள்.
நாளை மாலை டெல்லியில் இருந்து குஜராத் செல்கிறார்கள். நாளை மறுநாள் எம்.பி. தேர்தலில் ஓட்டு போடுகிறார்கள்.
பெங்களூருவில் தங்கி இருந்த 44 எம்.எல்.ஏக்களில் 3 பேர் உடல்நிலைக் குறைவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் பெங்களூருவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பின்னர் அவர்கள் 3 பேரும் குஜராத் சென்று விட்டனர். அங்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும் ஒரு எம்.எல்.ஏ. சொந்த வேலை காரணமாக குஜராத் சென்று விட்டார். தற்போது 40 எம்.எல்.ஏக்கள் மட்டுமே பெங்களூருவில் தங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.