திருப்பூர்:
தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்தவர் அருண்குமார் (வயது21). இவர் திருப்பூரில் தங்கியிருந்து பிரிண்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை அருண்குமார், திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் உள்ள மைதானத்தில் உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
இதுபற்றி அறிந்த திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில் அருண் குமாரை, முன்விரோதத்தில் அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார்(23) என்பவர் தனது நண்பர்களான சுந்தர்(23), தமிழ்செல்வன்(23), பரத்குமார்(21) ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முத்துக்குமார் உள்பட 4 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.
4 பேரும் போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
கடந்த 24-ந் தேதி அருண்குமாரும், முத்துக்குமாரும் தனித்தனி மோட்டார் சைக்கிளில் திருப்பூர் ரோட்டில் சென்றனர். அப்போது அருண்குமார், முத்துக்குமாரின் மோட்டார் சைக்கிளில் மோதுவது போல் அடிக்கடி ஓட்டி சென்றார். இதனால் கோபம் அடைந்த அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருண்குமாரிடம் தகராறில் ஈடுபட்டார்.
வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந் முத்துக்குமார், அருண்குமாரை தாக்கினார். இதைபார்த்த அருகில் உள்ளவர்கள் அவர்களை சமாதானம் செய்து வைத்ததை தொடர்ந்து திரும்பி சென்றனர்.
இதற்கிடையே நேற்று நாங்கள் 4 பேரும் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தோம். அப்போது அருண்குமார், தனது நண்பர் ஒருவருடன் சமாதானம் பேசுவதற்காக வந்தார்.
அப்போதும் தகராறு ஏற்படவே ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டோம். இதில் கோபம் அடைந்த நாங்கள் கையில் வைத்திருந்த கிரிக்கெட் மட்டை, ஸ்டெம்ப் உள்ளிட்டவற்றை எடுத்து அருண்குமாரை சரமாரியாக தாக்கினோம். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கி விழுந்து விட்டார்.
இதை பார்த்து அதிர்ச்சியான நாங்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டோம். பின்னர் தான் அவர் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து நாங்கள் ஊரை விட்டு தப்பி செல்ல முயற்சித்த போது போலீசார் மடக்கி பிடித்துவிட்டனர் என்றனர்.
இதையடுத்து போலீசார் முத்துக்குமார் உள்பட 4 பேரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.