செய்திகள்

கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் பலி

டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் உயிரிழந்ததால், கோவை அரசு ஆஸ்பத்திரியில் பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

கோவை:

கோவையில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 3 மாதத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 30 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் செட்டிப்பாளையம் குமரன் வீதியை சேர்ந்தவர் ராம்ராஜ். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.

அப்போது இவரது மகன் கருணாவிஷ்ணு (வயது 4) காய்ச்சலால் அவதிப்பட்டார். சிறுவனுக்கு காய்ச்சலுடன் மூச்சு திணறல் மற்றும் ரத்த போக்கு பாதிப்பு ஏற்பட்டது.

இதற்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் கருணாவிஷ்ணுவை சிகிச்சைக்காக அவனது பெற்றோர் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் கருணாவிஷ்ணுவின் ரத்த மாதிரியை பரிசோதனை செய்த போது அவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

எனவே டாக்டர்கள் சிறுவனுக்கு சிறப்பு வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் கருணாவிஷ்ணு நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதனால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 22 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 116 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.