செயின் பறிப்பு 
செய்திகள்

குலசேகரம் அருகே பெண்ணை தாக்கி 4½ பவுன் நகை பறிப்பு

குலசேகரம் அருகே மொபட்டில் சென்ற பெண்ணை தாக்கி 4½ பவுன் நகையை மர்ம நபர் ஒருவர் பறித்து சென்றார்.

திருவட்டார்:

குலசேகரம் நாககோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி சுஜா (வயது 45). இவர் நேற்று சென்னையில் பணியாற்றும் தனது மகளை பஸ் ஏற்றி விடுவதற்காக குலசேகரம் பஸ்நிலையம் வந்தார். அங்கு மகளை பஸ் ஏற்றி விட்டு அவர் தனது மொபட்டில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.

மலவிளை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் திடீரென சுஜா கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை பறித்தார். அதனை பறிக்க விடாமல் சுஜா கொள்ளையனுடன் போராடினார்.

கொள்ளையன் தாக்கியதில் சுஜா மொபட்டுடன் கீழே சரிந்து விழுந்தார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கொள்ளையன் சுஜா அணிந்திருந்த 4½ பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றான். தகவல் அறிந்து அந்த பகுதியினர் வருவதற்குள் கொள்ளையன், அங்கிருந்து தப்பி தலைமறைவானான்.

இது குறித்து சுஜா, குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.